பெண்களுக்கு ஆரோக்கிய வாழ்க்கையினை தருவதே என் நோக்கம்!

நன்றி குங்குமம் தோழி

சிவகாசியை சேர்ந்த செல்வ லட்சுமி பெண்களின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் மூலிகை நாப்கின்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். எரிச்சல், தொற்று ஏற்படுத்துகிற குறைவான உறிஞ்சும் தன்மை கொண்ட நாப்கின்களுக்கு மாற்றாக, மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் நாப்கின்களை, இதுபற்றி அறியாத சுற்றுவட்டாரப் பெண்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

“திருமணத்திற்குப் பிறகு சிவகாசியில் உள்ள ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நான்கு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினேன். பின்னர் குடும்பச் சூழல் காரணமாக மதுரைக்கு குடிப்பெயர வேண்டியிருந்தது. அங்கு குழந்தைகளை கவனித்துக் கொண்டே, நேரத்தை வீணாக்காமல் வீட்டிலிருந்தே ஏதேனும் தொழில் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அந்தச் சமயத்தில்தான், என் தோழி ஒருவருடன் கெமிக்கல் இல்லாத காட்டன் நாப்கின்களை பற்றி பேசிய போது, எனக்கு ஒரு பொறி தட்டியது. வெறும் தையல் இயந்திரத்தை மட்டுமே கொண்டு இந்தத் தொழிலை தொடங்க முடியும் என்பது எனக்கு பெரிய ஊக்கமாக இருந்தது.

தமிழ்நாட்டின் முதல் மூலிகை நாப்கின் தயாரிப்பாளரான முசிறியை சேர்ந்த வள்ளியிடமிருந்து முறையாக இந்தப் பயிற்சியை கற்றுக்கொண்டேன். ஆனால், நான் செய்யப் போகின்ற தொழில் மற்றும் என் தயாரிப்புகள் அர்த்தமுள்ளவையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நான் இந்த தொழிலை தொடங்குவதற்கு முன், சந்தையில் உள்ள சாதாரண நாப்கின்களுக்கும் மூலிகை நாப்கின்களுக்கும் உள்ள வித்தியாசத்தைத் தேடி அறிந்து கொண்டேன்.

நீர்க்கட்டி, அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற பெண்களுக்கு ஏற்படும் பல ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகளுக்கு சாதாரண நாப்கின்களில் உள்ள கெமிக்கல்களும் ஒரு காரணமாக அமையலாம் என்பதை அறிந்தேன். அதிலுள்ள டயாக்ஸின், பாலி எத்திலீன், வாசனை திரவியங்கள், திரவத்தை உறிஞ்சுவதற்காக சேர்க்கப்படும் பாலிமர் போன்றவை இதற்கு காரணமாகலாம். எனவே, இது போன்ற பிரச்னைகளுக்கு மாற்றாக சுத்தமான பருத்தி மற்றும் மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் நாப்கின்கள் இருக்கும் என்பதை நம்பினேன்” என்றவர், தயாரிப்பு முறை குறித்து விளக்கினார்.

“சுத்தமான பருத்தி, பயோ-டிகிரேடபிள் லீக் சீட் மற்றும் கிளாத் ஆகியவற்றை நாப்கின் தயாரிப்பில் பயன்படுத்துகிறேன். இதில் சேர்க்கப்படும் மூலிகைகள் ஒவ்வொன்றும் ஒரு மருத்துவக் குணத்தைக் கொண்டுள்ளன. வேம்பு, கிருமி நாசினியாகச் செயல்படுகிறது. கற்றாழை, உடலுக்குக் குளிர்ச்சியை தருகிறது. திரிபலா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வெட்டிவேர், நறுமணத்தைத் தருவதோடு தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது.

இந்த மூலிகைகளைச் சேகரித்து, சுத்தம் செய்து, உலர வைத்துப் பொடியாக்கி, பஞ்சின் அடுக்குகளுக்கு இடையே வைத்து தயாரிக்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு கொரோனா காலத்தின் போது ஆரம்பத்தில் என் சுற்றுவட்டாரப் பெண்களுக்கு 100 நாப்கின்களை இலவசமாகக் கொடுத்து, பின்னூட்டம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டேன். அதன் மூலம் என் தயாரிப்பின் நிறை, குறைகளை அறிந்துகொள்ள முடிந்தது.

மூலிகை நாப்கினை பயன்படுத்திய பெண்கள் அளித்த பின்னூட்டங்களை வைத்து தயாரிப்பினை மாற்றங்கள் செய்ய உதவியாக இருந்தது. சிலர் வழக்கமாக நாப்கின்களை காட்டிலும் இவற்றை பயன்படுத்தும் போது எரிச்சல் இல்லாமலும், துர்நாற்றம் ஏற்படுவதை தடுப்பதாகவும் சொன்னார்கள். மேலும், சிலர் இது வழக்கத்தை விட அளவில் பெரியதாகவும் பயன்படுத்துவதற்கு அசௌகரியமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அவர்களின் ஆலோசனையின் பேரில் தயாரிப்பில் பல மாற்றங்களைச் செய்து மேம்படுத்தினேன். நாப்கின் அளவினை குறைத்து தடிமனாக இல்லாமல் சிறியதாகவும் மெல்லியதாகவும் அதிகம் உறிஞ்சும் தன்மையுடனும், அதிகம் எரிச்சல் மற்றும் துர்நாற்றத்தை ஏற்படுத்தாத ஆரோக்கியமான மூலிகை நாப்கினை தயார் செய்தேன். இதன் பின்னர் பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது” எனும் செல்வ லட்சுமி, தொழிலில் ஏற்படுத்திய சிறு முன்னேற்றம் குறித்து பகிர்ந்தார்.

“தொடக்கத்தில் கைமுறையாக மட்டுமே நாப்கின்களை தயாரித்து வந்தேன். ஆனால், அவ்வாறு செய்யும்போது அது முழுமையான ஆரோக்கிய முறையாக இருக்காது. எனவே, தற்போது இயந்திரங்களை பயன்படுத்தி நேர்த்தியான முறையில் தயாரித்து வருகிறேன். எனது தயாரிப்புகளுக்கு தற்போது கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலிருந்து வாடிக்கையாளர்கள் உள்ளனர்.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த எனக்கு, இன்று யாரிடமும் கையேந்தாமல் என் இரு மகன்களையும் படிக்க வைத்து, குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறேன். தற்போது இரண்டு பெண் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்துள்ளேன். நாம் செய்யும் தொழிலை நேசித்துச் செய்ய வேண்டும்.

அந்தத் தன்னம்பிக்கை இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதையே நான் மற்ற பெண்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். குறைந்த விலையில் தரமான மற்றும் ஆரோக்கியமான நாப்கின்களை வழங்குவதே எனது நோக்கம். ஆனால், சுத்தமான பருத்தி மற்றும் மூலிகைகளுக்கான செலவு, உற்பத்தி ஆகியவற்றை கருத்தில்கொண்டு, நியாயமான விலையில் ‘அக்யூரா இயற்கை மூலிகை நாப்கின் (Accura Herbal Sanitary Napkin)’ விற்பனை செய்து வருகிறேன்.

பேண்டி லைனர், நார்மல், மீடியம் எனப் பல்வேறு வகைகளில் தயாரிப்புகள் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் அதன் உறிஞ்சும் தன்மையில் மாறுபடும். உதிரப்போக்கின் தேவைக்கு ஏற்ப நாம் இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இது போன்ற பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்களால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது” என்றார்.

தொகுப்பு: ஆர். ஆர்

 

 

 

 

Related Stories: