ஈரோடு: ஈரோட்டில் ரயில்வே பணிமனையில் கிரேன் உடைந்து ரயில் இன்ஜின் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் எலக்ட்ரிக் லோகோ (மின்சார ரயில்) பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் எலக்ட்ரிக் ரயில் இன்ஜினில் ஏற்படும் பழுதுகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை எலக்ட்ரிக் லோகோ பணிமனையில் ஒரு ரயில் இன்ஜினில் ஏற்பட்ட பழுதினை நீக்க கிரேன் மூலம் தூக்கி, பழுது நீக்கும் ரேம்பிற்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது, சுமார் 80 டன் எடை கொண்ட ரயில் இன்ஜினின் பாரம் தாங்காமல், எதிர்பாராதவிதமாக கிரேன் உடைந்தது. இதில், 50 அடி உயரத்தில் தொங்கி கொண்டிருந்த ரயில் இன்ஜின் கீழே விழுந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்துக்கு பணிமனையில் உள்ள இயந்திரங்கள், கிரேன்கள் குறிப்பிட்ட கால இடைவேளையில் பராமரிப்பு பணி செய்யாததே காரணம் என ரயில்வே தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், ரயில்வே பணிமனையில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட காரணமாக இருந்த ரயில்வே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
