அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கள் தவெகவினருக்கு ஒதுக்கீடு அதிமுக எம்எல்ஏக்களுக்கு முக்கிய இலாகா தர இனி வாய்ப்பில்லை: தொடர் ஆதரவு கிடைப்பதில் சிக்கல்

சென்னை: தமிழக அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கள் தவெகவினருக்கே ஒதுக்கப்பட்டு விட்டதால், தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு இனி முக்கிய இலாகா ஒதுக்க வாய்ப்பில்லை. இதனால், இந்த எம்எல்ஏக்களின் தொடர் ஆதரவு விஜய்க்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள்விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். முன்னதாக, விஜய் தரப்பில் இருந்து எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதிமுகவை இரண்டாக உடைத்து, அதில் ஒரு பிரிவினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தால் 6 அமைச்சர் பதவியும், 10 வாரிய தலைவர் பதவியும் வழங்கப்படும். இதில் 4 முக்கியத்துவம் வாய்ந்த இலாகாக்கள் அதிமுகவுக்கு தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று, எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி உத்தரவை மீறி 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அவர்களின் எம்எல்ஏ பதவி பறிக்கப்படலாம் என்ற ஆபத்து தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்த பட்டியலை முதல்வர் விஜய்யின் தனி செயலாளர் ெசந்தில்குமார் நேற்று தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து கடிதம் கொடுத்தார். தமிழக அமைச்சரவையில் முதல்வர் உள்ளிட்ட 34 பேர் அமைச்சர்களாக இருக்க முடியும்.

தற்போது விஜய் உள்ளிட்ட 10 பேர் மட்டுமே அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இன்னும் கூடுதலாக 24 பேரை அமைச்சரவையில் சேர்க்கலாம். அதன்படி, தவெகவில் கூடுதலாக சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. அதேபோன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும். மேலும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு 6 பேருக்கு அமைச்சர் பதவி, அமமுக கட்சி சார்பில் வெற்றி பெற்ற காமராஜுக்கு வழங்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். ஆளுநர் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அதிமுக எம்எல்ஏக்கள் மூன்றில் 2 பங்கு எம்எல்ஏக்களான 32 பேர் தனியாக செயல்பட்டால் தான் தனி அணியாக அறிவிக்க முடியும். தற்போது 25 பேர் மட்டுமே தனியாக செயல்படுவதால், அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாய்ந்தால், எம்எல்ஏ பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அதிமுகவை அமைச்சரவை பட்டியலில் சேர்க்க தற்போது அனுமதிக்க முடியாது என்று ஆளுநர் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

அப்படியே ஆளுநர் அனுமதி அளித்து, அதிமுக எம்எல்ஏக்களை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தாலும், அதிமுக அமைச்சர்களுக்கு ஏற்கனவே விஜய் தரப்பினர் அளித்த வாக்குறுதிபடி முக்கிய இலாகாக்கள் ஒதுக்க இனி வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. காரணம், தவெகவில் உள்ள 9 அமைச்சர்களுக்கு நேற்று இலாகா ஒதுக்கப்பட்டு விட்டது. இதில் பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜுனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த துறையைத்தான் எஸ்.பி.வேலுமணி கேட்டிருந்தார்.

அதேபோன்று சி.வி.சண்முகம் ஏற்கனவே பார்த்து வந்த சட்டத்துறை நிர்மல்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையை அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் கேட்டிருந்தார். இந்த இலாகா தவெக அமைச்சர் அருண்ராஜுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி முக்கிய இலாகாக்கள் அனைத்தும் தவெக அமைச்சர்கள் வைத்துக்கொண்டனர்.

இனி மீதம் இருப்பது உயர் கல்வி துறை, விவசாயம், கூட்டுறவு துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, போக்குவரத்து துறை, வனத்துறை, சிறு தொழில்கள், தொழிலாளர் நலத்துறை, வணிகவரித்துறை, சுற்றுலாத்துறை, இந்து சமய நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, கால்நடைத்துறை, சமூகநலத்துறை, வீட்டு வசதி துறை, ஜவுளித்துறை, தகவல் தொழில்நுட்ப துறை, பால்வளத்துறை உள்ளிட்ட சிறிய துறைகள் மட்டுமே இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.

காங்கிரஸ் மற்றும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கினால் இதில் ஏதாவது சிலவற்றை மட்டுமே வழங்க முடியும். முக்கிய இலாகாக்கள் வழங்க வாய்ப்பு இல்லை. இதுபோன்ற முக்கியத்துவம் இல்லாத பதவிகளை பெற அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் ஒத்துக்கொள்வார்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு அதிமுக ஆதரவு தொடர்ச்சியாக கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான்.

Related Stories: