திருவள்ளூர், மே.15: திருவள்ளூர் அருகே குடும்பத்தகராறு காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர், பிஞ்சிவாக்கம் கிராமம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பரந்தாமன் (52). இவரது மகள் சபிதா திருவள்ளூரை அடுத்த சத்தரை கிராமம், பள்ளக் காலனியை சேர்ந்த உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது கணவன் – மனைவி இருவரும் தனித்தனியாக பிரிந்து வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கிடையே திருவள்ளூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து உதயகுமார், தன் குழந்தையை பார்ப்பதற்காக பிஞ்சிவாக்கம் கிராமத்திற்கு மது போதையில் வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது உதயகுமாருக்கும், அவரது மனைவி சபிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை தடுக்க வந்த சபிதாவின் தந்தை பரந்தாமன் மற்றும் உறவினர் நிதிஷ்குமார் ஆகியோரை உதயகுமார், தகாத வார்த்தைகளால் பேசி தான் வைத்திருந்த பாட்டிலால் தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
பதிலுக்கு பரந்தாமன் மற்றும் அவரது உறவினர் நிதிஷ்குமார், சங்கர், விக்ரம் ஆகிய 4 பேரும் சேர்ந்துக் கொண்டு உதயகுமாரை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக கடம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த, புகாரின்பேரில், இரு தரப்பையும் சார்ந்த 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
