திருவள்ளூர், மே 12: திருவள்ளூர் ஆதிசக்தி தேவி லோகமாத்தம்மன் கோயில் 39வது ஆண்டு தீமிதி விழாவில், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகம் அருகே ஆதிசக்தி ஸ்ரீதேவி லோகமாத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், 39ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, கடந்த 6ம் தேதி காலை 6 மணிக்கு கோ பூஜையும், 10 மணிக்கு கூழ் ஊற்றுதலும், மாலை 7.30 மணிக்கு காப்பு கட்டுதலும், 7ம் தேதி காலை 9 மணிக்கு பூங்கரகம் பூஜையும், 8ம் தேதி காலை 6 மணிக்கு நாகாத்தம்மன் புற்று பூஜையும், 9 மணிக்கு பூங்கரகம் திருவீதி உலாவும், 12 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு மாதங்கி திருக்கல்யாணமும், இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.
9ம் தேதி காலை 11 மணிக்கு பரசுராமர் மற்றும் போத்து ராஜா மகா தீபாராதனையும், மாலை 5 மணிக்கு தவசு மரம் ஏறுதலும், மாலை 6 மணிக்கு வணம் கடித்தலும் நடைபெற்றது. 10ம் தேதி காலை 8 மணிக்கு மகா தீபாராதனையும், 11 மணிக்கு கூழ் ஊற்றுதலும், பகல் 1 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழாயும் நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், தீமிதித்து தங்களது வேண்டுதல் நிறைவேற்றினர். இரவு 7.30 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.
தொடர்ந்து, 11ம் தேதியான நேற்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு அன்னதானமும், இரவு 9 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் ந.நாகராஜன் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
