காதலிக்க மறுத்த சிறுமியை மிரட்டிய கல்லூரி மாணவன் போக்சோவில் கைது

 

மாதவரம், மே 9: சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும், பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்த ஸ்டீபன் ராஜ்(19) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஸ்டீபன் ராஜ் போதை பழக்கத்திற்கு அடிமையானதால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதால், காதலை தொடர வேண்டாம், பிரிந்துவிடலாம் என்று சிறுமி கூறினார். மேலும், ஸ்டீபன் ராஜூடன் பழகுவதை சிறுமி நிறுத்தினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்டீபன் ராஜ் சிறுமியுடன் எடுத்த புகைப்படங்களை அவரது உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டி வந்துள்ளார். மேலும், மீண்டும் தன்னை காதலிக்கவில்லை என்றால், அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாயார் எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில், போலீசார் விசாரித்ததில், ஸ்டீபன்ராஜ் சிறுமியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை உறவினர்களுக்கு அனுப்பியது தெரியவந்தது. இதனையடுத்து, கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜை என்பவரை நேற்று எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: