மூலப்பொருட்களின் இருப்பை உறுதி செய்யும் பொருட்டு பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரி முழுவதும் ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம்

 

சென்னை: பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது, லட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக ஊரக மற்றும் பகுதி-நகர்ப்புறப் பெண் தொழிலாளர்கள் இத்துறையின் வாயிலாக நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை பெற்று வாழ்ந்து வருகின்றனர். அண்மை காலமாக, பருத்தி விலை உயர்வு மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட நூல் விலை உயர்வால் இத்தொழில் கடுமையான நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது. நாட்டில் பருத்தி உற்பத்திக் குறைவு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளின் அதிகரிப்பு ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாகும் என்பதை நான் அறிந்துள்ளேன். பருத்தியின் விலை கடந்த இரண்டு மாதங்களில் கண்டி ஒன்றுக்கு ரூ.54,700லிருந்து ரூ.67,700 அதாவது, 25 சதவீதம் உயர்ந்துள்ளது.அதே நேரத்தில் நூல் விலை கிலோவுக்கு ரூ.301லிருந்து ரூ.330ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், இறக்குமதி மூலமாக மட்டுமே மூலப்பொருட்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்ய இயலும், ஆனால் பருத்திக்கு 11 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.

இத்தகைய சூழலில், பருத்தி இறக்குமதிக்கு வரிவிலக்கு அளிப்பது, அதிகரித்து வரும் தொழிற்துறைக்கான ஏற்றுமதி ஆர்டர்களை நிறைவு செய்வதற்கும், உலகளாவிய போட்டி சந்தையினை எதிர்கொள்வதற்கும் உறுதுணையாக இருக்கும், வேளாண்மைக்கு அடுத்தபடியாக, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாக அமைந்துள்ளது. லட்சக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதும், ஜவுளி மதிப்புச் சங்கிலியின் நீடித்த நிலைத்தன்மையை உறுதி செய்வதும் அரசின் மிக முக்கியப் பொறுப்பாகும்.
ஆகவே, மூலப்பொருட்களின் இருப்பை உறுதி செய்யும் பொருட்டு, தற்போதுள்ள 11 சதவீத பருத்திக்கான இறக்குமதி வரியை முழுவதுமாக ரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், இது ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறை உலக அளவில் போட்டித்திறனுடன் திகழ்வதற்கும், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், வேலை வாய்ப்புகளைப் பாதுகாப்பதற்கும் வழிவகை செய்யும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 

Related Stories: