நன்றி குங்குமம் தோழி
*சாம்பார், ரசம் மீதி இருந்தால் அவலை களைந்து அதில் கலந்து ஊறியதும் வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து அவலை கொட்டிக் கிளறினால் பிஸிபேளாபாத் மாதிரி சூப்பர் டேஸ்டாக இருக்கும்.
*ஒரு கப் அவலை களைந்து வடித்து ½ கப் தயிர் சேர்த்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு கரண்டியால் நன்கு மசித்து இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் துருவிய கேரட் சேர்க்கவும். 3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து, வடையாக தட்டி பொன்னிறமாக பொரிக்க வேண்டும்.
*பிரெஞ்சு ஃப்ரைஸை பாதியளவு பொரித்து விட்டு, ஃப்ரீசரில் வைத்து பரிமாறும் முன் மீண்டும் பொரித்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
– அபர்ணா சுப்ரமணியம், சென்னை.
*சாம்பார் தண்ணீராக இருந்தால் பொட்டுக் கடலையை மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் சேர்த்தால் குழம்பு சுவையாக இருக்கும்.
*வெண்டைக்காய் பொரியல் செய்து முடித்த பின்பு, வேர்க்கடலையை பொடித்து போட்டு வைத்தால் சுவை அதிகரிக்கும்.
*பலகாரங்கள் செய்யும் போது சூடான எண்ணெயில் இஞ்சியை தட்டி அதை வறுத்தெடுத்தால் எண்ணெய் கசண்டு இருக்காது.
*வத்தக்குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் தேங்காய்ப்பால் சேர்க்கலாம்.
– புனிதவதி, கோவை.
* முட்டையின் அகலமான பகுதியில் ஊசியால் ஒரு துளை போட்டு வேக விட்டால் விரிசல் ஏற்படாது.
* கசப்பு சுவையுள்ள காய்களை நறுக்கி அரிசி களைந்த நீரில் அரை மணி நேரம் போட்டு வைத்தால் கசப்பு குறையும்.
*இறைச்சியை வேக விடும்போது தேங்காய் ஓட்டு துண்டுகளுடன் வேகவிட்டால் மிருதுவாக வெந்து பதமாகும். பிறகு ஓடுகளை எடுத்து எறிந்து விடலாம்.
*தேங்காய் மூடி மீதம் இருந்தால் அதை ஃபிரிட்ஜில் வைத்தால் கெட்டுப் போகாது.
– டி.லதா, நீலகிரி.
*மைசூர் பாகு செய்யும் போது சிறிது பாதாம் பருப்பை ஊறவைத்து, கடலையுடன் சேர்த்துக் கிளறினால் அதன் சுவையே அலாதி.
* கொத்தமல்லி, புதினா இலைகளை பொடியாகிப் போட்டு தட்டை செய்தால் வாசனையாக இருக்கும்.
* சேப்பங்கிழங்கு சிப்ஸ் செய்யும் போது பெருஞ்சீரகம் சிறிதளவு சேர்த்தால் மணமாக இருக்கும்.
*ரவாலட்டு, பொட்டுக்கடலை லட்டு செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக கால் பங்கு பால் பவுடரை கலந்து லட்டு செய்தால் வித்தியாசமான சுவையாக இருக்கும்.
– கே.சுபாக்கனி, கன்னியாகுமரி.
*ஒரு டப்பாவில் சிறிது சர்க்கரையை தூவி அதில் பிஸ்கெட்டை போட்டு வைத்தால் நமுத்துப் போகாமல் இருக்கும்.
*மிளகாயின் காம்பை நீக்கி விட்டு பேப்பரில் சுற்றி ஃபிரிட்ஜில் வைத்தால் கெடாமல் இருக்கும்.
– எம்.ஏ.நிவேதா, திருச்சி.
*புளி சாதம் செய்யும் போது பால், பெருங்காயம் சேர்த்தால் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
*அறுகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிட உடல் ஆரோக்கியம் பெறும்.
*தக்காளி சட்னியில் சில சொட்டு எலுமிச்சைச் சாறு கலந்தால் சட்னி சுவைக்கும்.
*வெங்காய பக்கோடா செய்ய வறுத்த வேர்க்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசைந்தால் பக்கோடா மொறுமொறுவென்று இருக்கும்.
– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
