நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது உரை திமுக திட்டங்கள் தொடர வேண்டும்: தவெகவிற்கு ஆதரவு அளித்த கட்சிகளின் எம்எல்ஏக்கள் பேரவையில் பேச்சு

சென்னை: திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் தொடர வேண்டும், என நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது உரை மீது எம்எல்ஏக்கள் பேசினர். முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் மீது பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது நேற்று சட்டமன்ற கட்சி தலைவர்கள் பேசினர்.

* ராஜேஷ்குமார் (காங்கிரஸ்): இந்த மண்ணில் வெறுப்பு அரசியலை வேரூன்ற விடமாட்டோம். கொள்கை ரீதியில் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.
* செல்லசுவாமி (மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): தமிழ்நாட்டை பாதுகாக்கும் நோக்கத்தோடு, நிலையான ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது.
* வன்னியரசு (விசிக): ஆளுநர் ஆட்சியை தடுக்கும் வகையில் விசிக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். இந்த அரசும் மாநில உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நல திட்டங்கள் தொடர வேண்டும்.
* ஷாஜகான் (ஐ.யூ.எம்.எல்.): நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் தொடர வேண்டும்.
* காமராஜ் (அமமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்): நான் நேற்று ஆதரவு கொடுத்தேன், இன்று ஆதரவு கொடுக்கிறேன், நாளையும் ஆதரவு கொடுப்பேன். மன்னார்குடி தொகுதி மக்களுக்கும், எனக்கும் பாதுகாப்பாக முதல்வர் விஜய் இருக்க வேண்டும்.
* ராமச்சந்திரன் (கம்யூனிஸ்ட்): பின்புற வாசல் வழியாக குடியரசு தலைவர் ஆட்சியை அமைத்து விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக தவெகவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது.
* போஜராஜன் (பாஜ): எங்களின் கட்சி நிலைப்பாட்டில் நடுநிலை வகிக்கிறோம். பாஜ ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை. நடுநிலை.
* சவுமியா அன்புமணி (பாமக): சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், முழு மதுவிலக்கு வேண்டும், போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு நம்பிக்கை தீர்மானத்தில் விலகியிருக்க விருப்பம்.
* தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி): முதல்வரின் நம்பிக்கையை மதிக்கிறேன். ஆனால் அதனை அரசுக்குள் கொண்டுவருவதை ஏற்க முடியாது. அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.
* நித்தியானதம் (கொமதேக): எதிர்க்கட்சியின் கடமை தடையாக இருப்பது அல்ல. குழப்பம், அனுபவமின்மை, நிலையற்ற அரசியலை உறுதியாக எதிர்ப்போம். அரசுக்கு எதிராக கொமதேக எதிர்ப்பு நிலை எடுக்கிறது.
* ஜவாஹிருல்லா (மமக): புதிய அரசு சமூகநீதியை பாதுகாக்க வேண்டும். திமுக ஆட்சியில் பல துறைகளில் முன்னேற்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அது தொடர வேண்டும். தவெக அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிர்ப்பு.

Related Stories: