திருப்பூர்: திருப்பூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் அர்ச்சகர் குடும்பம், போலீஸ்காரர் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த வெள்ளகோவில் குறுக்கத்தி பகுதியில் வெள்ளகோவில் காவல் நிலையத்துக்குட்பட்ட சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி திருப்பூர் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முக்கிய சோதனைச்சாவடி மையமாகும். நேற்று அதிகாலை 3 மணி அளவில் சோதனை சாவடி அருகே இருந்த சாலை தடுப்பு மீது சவுக்கு கட்டை ஏற்றி வந்த லாரி மோதியுள்ளது. இதனால் லாரியை சிறிது தூரம் தள்ளி நிறுத்தி விட்டு லாரி ஓட்டுனரான பண்ருட்டி பகுதியை சேர்ந்த செந்தில் (48) மற்றும் சோதனைச்சாவடியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ரவிச்சந்திரன் (36) ஆகியோர் அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே திசையில் அதிவேகத்தில் வந்த கார், லாரி ஓட்டுனர் செந்தில் மற்றும் பணியில் இருந்த காவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது மோதிவிட்டு அருகில் இருந்த லாரி மீது மோதியுள்ளது. இதில் கார் உருக்குலைந்து கார் ஓட்டுநர் ராம் (22), மயிலாடுதூறை வள்ளலார் வீதியை சேர்ந்த நரசிம்மன் (65), அவரது மனைவி சாந்தாலட்சுமி (60), மகன் பாலாஜி (28), சாலை தடுப்புகளை சரி செய்த காவலர் ரவிச்சந்திரன் (36) மற்றும் லாரி ஓட்டுநர் செந்தில் (48) என 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் உயிரிழந்த 6 பேரின் உடல்களை திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் காரில் வந்தவர்களில் பாலாஜி என்பவர் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வந்தது தெரிந்தது. இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கீதாரமணி என்பவருடன் திருமணமாகி உள்ளது. கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் சீனிவாச பெருமாள் கோயில் குடியிருப்பில் தங்கி அங்கேயே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தனது தந்தை நரசிம்மனுக்கு அருகில் உள்ள ஜகநாத பெருமாள் கோயிலில் அர்ச்சகர் பணிக்கு பணி பெற்று தந்துள்ளார்.
நேற்று பணியில் சேருவதற்காக நேற்று முன்தினம் மயிலாடுதுறை சென்ற பாலாஜி தனது தாய் மற்றும் தந்தையை வாடகை காரில் அழைத்து வந்துள்ளார். வரும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பாலாஜி மயிலாடுதுறையில் இருந்து திரும்பி வர ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பெற்றோர் பாதுகாப்பிற்காக வாடகை காரில் வந்துள்ளார். இரவு முழுவதும் வாகனம் ஓட்டியதால் கார் ஓட்டுநர் ராம் சற்று தூக்க கலக்கத்தில் அசந்ததால் கண் இமைக்கும் நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கலெக்டர் மனீஷ், கோவை சரக டிஐஜி சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட பொறுப்பு எஸ்.பி கார்த்திகேயன் ஆகியோர் சம்பவம் நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்டு பின் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை பார்வையிட்டனர். தொடர்ந்து உயிரிழந்த காவலர் ரவிச்சந்திரனின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
