ராசிபுரம்: ராசிபுரம் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை ரயில்முன் தள்ளி 2 வாலிபர்கள் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அருகேயுள்ள தனியார் ரப்பர் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் தனியாக வீடு எடுத்து பீகார் மாநிலத்தை சேர்ந்த தனது நண்பர்களுடன் தங்கியுள்ளார். இந்நிலையில், நிறுவனத்தில் தன்னுடன் பணியாற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 ஆண் நண்பர்களுடன், இளம்பெண் நேற்று அதிகாலை 4 மணியளவில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. அந்த இளம்பெண் மற்றும் 2 வாலிபர்களும், ராசிபுரம் அத்திப்பழகானூர் அருகேயுள்ள ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். அந்த சமயத்தில் 2 வாலிபர்களும் தங்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் என இளம்பெண்ணை அழைத்ததாக கூறப்படுகிறது.
அதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவிக்கவே, வாலிபர்களுக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நேரத்தில் அவ்வழியாக ரயில் வந்துள்ளது. அப்போது, ரயில் முன் அந்த இளம்பெண்ணை 2 வாலிபர்களும் தள்ளிவிட்டு கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ரயில் வருவதற்கு முன்னதாக அந்த இளம்பெண் தண்டவாளத்தின் மறுபகுதிக்கு சென்று கீழே விழுந்துள்ளார். இதில், அவரின் 2 கால்களிலும் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் அந்த இளம்பெண்ணின் சத்தத்தை கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், இதுகுறித்து ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடம் வந்த போலீசார், அந்த இளம்பெண்ணை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராசிபுரம் போலீசார் மற்றும் சேலம் ரயில்வே போலீசார், இளம்பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்ய முயன்ற 2 இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்தி, அவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
