சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பஞ்சாப்பில் ஜலந்தரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் வெளியே முதலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில், அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே அமிர்தசரஸின் காசா பகுதியில் உள்ள ராணுவ முகாம் அருகிலும் பலத்த சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டது. இந்த இரட்டைச் சம்பவங்களால் பாதுகாப்பு முகமைகள் மற்றும் உளவுத்துறையினர் உச்சக்கட்ட எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளனர்.
முதல் சம்பவமானது ஜலந்தரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை பஞ்சாப் தலைமையகத்தின் நுழைவு வாயில் அருகே இரவு சுமார் 8:15 மணியளவில் நிகழ்ந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விளக்கமளித்த ஜலந்தர் காவல் ஆணையர், அங்கு பணியில் இருக்கும் ஒருவருக்குச் சொந்தமான ஸ்கூட்டர் தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், இருப்பினும் இதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் ஓய்வதற்குள், இரவு 10:30 மணியளவில் அமிர்தசரஸின் காசா பகுதியில் உள்ள ராணுவ முகாம் அருகே மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த வெடிப்பின் சத்தம் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவு வரை கேட்டதாகவும், ராணுவ வளாகத்தின் சுவர்கள் அதிரும் அளவிற்கு அதன் தீவிரம் இருந்ததாகவும் உள்ளூர் மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர். உடனடியாக பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தற்போது வரை இந்த இரண்டு சம்பவங்களிலும் உயிர்ச்சேதமோ அல்லது பெரிய அளவிலான காயங்களோ ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தடயவியல் நிபுணர்கள் அங்குள்ள வெடிபொருட்களின் தன்மையை ஆய்வு செய்து வருகின்றனர்.
