புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் தொடர்பான வழக்கானது 11வது நாளாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து அப்போது மத நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,\\” சமய நிறுவனங்கள் சடங்குகள் மற்றும் விழாக்கள் போன்ற பல செயல்பாடுகளை மேற்கொள்கின்றன.
அவற்றில் பங்கேற்காமல், ஒருவரால் மதத்தை முழுமையாகப் பின்பற்ற முடியாமல் போகலாம். கல்விசார் எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மதத்திற்கு தனிப்பட்ட மற்றும் நிறுவன ரீதியான அம்சம் ஆகிய இரண்டு அம்சங்களும் உள்ளன. வரலாறு முழுவதும் மக்கள் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் அதுபோன்ற நிறுவனங்களிலும் வழிபட்டுள்ளனர். நடைமுறையில், தனிப்பட்ட மத வாழ்க்கை என்பதை பரிமாணத்திலிருந்து பிரிக்க முடியாதது.
குறிப்பாக ஒருவர், மற்றொரு மதத்தின் வழிபாட்டுத் தலத்தில் பின்பற்றப்படும் சடங்குகள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்கும் பட்சத்தில், உரிமையின் அடிப்படையில் நுழையலாம். அரசியலமைப்புச் சட்டம் ஒரு நபரின் மத சுதந்திரத்தை அவரது சொந்த மதத்திற்கு மட்டும் கட்டுப்படுத்தவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதி அசானுதீன் அனுமானுல்லா கூறியதில், ” எனக்குத் தனிப்பட்ட உரிமை இருப்பதால், வேறுபட்ட நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றும் ஒரு மதப்பிரிவுக்குள் அதே வழியில் அதை பின்பற்ற நான் வலியுறுத்தலாம் என்று சொல்வது சரியான ஒன்று கிடையாது என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதி பி.வி.நாகரத்னா, ”இந்த விவகாரம் என்பது மிகவும் தீவிரமானது. தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தேவையான அனைத்தையும் செய்வார்கள். ஆனால், எல்லா நியமங்களையும் (விதிகளையும்) மீறுபவர்களை இந்த நீதிமன்றம் ஒருபோதும் ஊக்குவிக்காது. நாங்கள் மூடநம்பிக்கை கொண்டவர்கள் கிடையாது. அந்த தெய்வத்தின் மீது நம்பிக்கையும் பக்தியும் இல்லாதவர்களை உள்ளே நுழைய விடுங்கள் என்கிறீர்கள். நீங்கள் ஒரு உண்மையான பக்தர் அல்ல என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது.
இதில் சீராய்வு மனுதாரர்களுக்கு ஒரு தெளிவான உதாரணத்தை தருகிறேன். அதாவது கோயில் பூஜை அல்லது காணிக்கைகள் செலுத்தும் நேரத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டால், அதை எதிர்க்க முடியும். அதேப்போன்று இதுதொடர்பாக அரசு ஒரு சட்டத்தையும் கொண்டு வரலாம். ஏனெனில் அது ஒரு சமூகப் புறக்கணிப்பு ஆகும்.
ஆனால், இறைவனுக்கு உணவு படைக்கும் போது திரை மூடப்பட்டிருக்க வேண்டும் அல்லது கதவு மூடப்பட்டிருக்க வேண்டும். யாரும் அதனை பார்க்கக் கூடாது என்று சொல்கிறீர்களா?. அது மத அனுஷ்டானத்தின் ஒரு பகுதி. இவ்விரண்டிற்கும் இடையே ஒரு பரந்த வேறுபாடு உள்ளது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் என்று விளக்கமளித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
