கவுகாத்தி: சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்த தொகுதி மறுவரையறையே அசாமில் பாஜவின் மகத்தான வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. அசாமில் 126 தொகுதிகளில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ 82 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான பிபிஎப், ஏஜிபி தலா 10 தொகுதிகளையும் கைப்பற்றின. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 19 இடங்களையும், ராய்ஜோர் தள், ஏஐயுடிஎப் தலா 2 இடங்களையும், திரிணாமுல் காங்கிரஸ் ஒரு தொகுதியையும் வென்றன.
இதன் மூலம் பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணி 102 தொகுதிகளை கைப்பற்றி ஹாட்ரிக் வெற்றியுடன் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது. பாஜவின் இந்த மகத்தான வெற்றிக்கு கடந்த 2023ல் அசாமில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறை முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2011 மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தொகுதி மறுவரையறைக்குப் பின் நடந்த முதல் சட்டப்பேரவை தேர்தல் இது.
இந்த தொகுதி மறுவரையறை மூலம் முந்தைய முஸ்லிம் பெரும்பான்மை இடங்கள் எஸ்சி, எஸ்டி தொகுதிகளாக ஒதுக்கப்பட்டன. இதற்கு முன் நடந்த அனைத்து தேர்தல்களிலும், சிறுபான்மையினர் வாக்கு வங்கி அதிகமுள்ள 35 தொகுதிகள் அப்படியே காங்கிரஸ், ஏஐடியுஎப் கட்சிகளுக்கு கிடைத்து வந்தது. தொகுதி மறுவரையறைக்குப் பின், அதன் எண்ணிக்கை 25க்கும் குறைவாக குறைக்கப்பட்டது. இதன் மூலம், காங்கிரஸ், ஏஐடியுஎப் கட்சிகள் தங்களின் முந்தைய கோட்டைகளில் பெரும் சரிவை கண்டுள்ளன.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் வென்ற 24 தொகுதிகள் மறுவரையறையால் பாதிக்கப்படாத தொகுதிகளாகும். அதே சமயம், கணிசமான எண்ணிக்கையில் பெங்காலி பேசும் முஸ்லிம்களைக் கொண்ட பர்பேட்டா மற்றும் கோல்பாரா (மேற்கு) தொகுதிகள் முறையே எஸ்சி, எஸ்டி தொகுதிகளாக மாற்றப்பட்டதால் இவ்விரு தொகுதியையும் காங்கிரசிடமிருந்து என்டிஏ கூட்டணி கைப்பற்றியது.
இந்த தொகுதி மறுவரையறையின் தாக்கம் போடோலாந்து பிராந்தியத்திலும் எதிரொலித்தது. அங்கு பழங்குடியினருக்காக தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 11ல் இருந்து 15 ஆக அதிகரித்தது. அவற்றில் 10 தொகுதிகளில் என்டிஏ கூட்டணியில் உள்ள போடடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎப்) கைப்பற்றியது. ஆனால் அக்கட்சியின் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் மண்ணைக் கவ்வினார்.
* பாஜவை புறக்கணித்த இஸ்லாமியர்கள்
பெங்காலி பேசும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 25 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி தனது ஏஜிபி கூட்டணி கட்சி மூலம் காலூன்ற முயன்றது. இதற்காக ஏஜிபி சார்பில் 13 முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். ஆனால் சிட்டிங் எம்எல்ஏ உட்பட ஒருவராலும் அங்கு வெற்றி பெற முடியவில்லை. 26 தொகுதிகளில் போட்டியிட்ட ஏஜிபி 10 இடங்களில் வென்றது. வழக்கம் போல் பாஜ கட்சி எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரையும் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* பாஜ, காங். வாக்கு சதவீதம் அதிகரிப்பு
அசாமில் கடந்த 2021 தேர்தலில் பாஜவின் வாக்கு சதவீதம் 33.21 ஆக இருந்தது. 60 இடங்களில் வென்றிருந்தது. இம்முறை 4.6% அதிகரித்து 37.81 வாக்கு சதவீதத்துடன் கூடுதலாக 22 தொகுதிகளுடன் 82 இடங்களை கைப்பற்றி உள்ளது. 29.67 வாக்கு சதவீதத்துடன் 29 இடங்களில் 2021ல் வென்ற நிலையில் இம்முறை 0.17 சதவீதம் அதிகமாக 29.84 வாக்கு சதவீதம் பெற்று 19 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. 10 இடங்கள் குறைந்துள்ளன.
* 7 பெண்கள் மட்டுமே வெற்றி
அசாமில் 126 தொகுதிகளில் 59 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 7 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் 6 பேர் என்டிஏ கூட்டணியை சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக பாஜ சார்பில் 4 பெண் எம்எல்ஏக்களும், அதன் கூட்டணிகளான பிபிஎப், ஏஜிபி கட்சிகள் சார்பில் தலா 1 பெண் எம்எல்ஏக்களும் தேர்வாகி உள்ளனர். காங்கிரஸ் அதிகபட்சமாக 14 பெண் வேட்பாளர்களை களமிறக்கிய நிலையில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.
