மேற்கு வங்கத்தில் மம்தாவின் தோல்விக்கு சிறுபான்மையினர் ஓட்டுகள் சிதறியதே காரணம்: கட்சி அமைப்பிலும் பலவீனம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசின் தேர்தல் தோல்விக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் பரவலாக சிதறியதும், அமைப்பு ரீதியாக அக்கட்சி பலவீனமடைந்திருப்பதுமே காரணம் என தேர்தல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 294 இடங்களில் பாஜ கட்சி 207 தொகுதிகளில் வென்று முதல் முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. 15 ஆண்டாக ஆட்சி செய்து வந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 80 தொகுதிகளுடன் படுதோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த தேர்தலில் 215 இடங்களில் வென்று 48 சதவீத வாக்குகளை வைத்திருந்த திரிணாமுல் காங்கிரசின் வாக்கு சதவீதம் 40.94 ஆக சரிந்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் பாஜவின் வெற்றி அக்கட்சியின் மிகப்பெரிய எழுச்சியாக பார்க்கப்பட்டாலும், மம்தாவின் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்று சிறுபான்மையினர் வாக்குகள் சிதறியதே என தேர்தல் நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முர்ஷிதாபாத், மால்டா, உத்தர் தினாஜ்பூர் போன்ற மாவட்டங்களில் முஸ்லிம் வாக்குகளை திரிணாமுல் காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைத்தது.

3 மாவட்ட மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முஸ்லிம்கள். அங்குள்ள 43 சட்டப்பேரவை தொகுதிகளில் 2021ல் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வென்ற பாஜ இம்முறை 19 இடங்களை கைப்பற்றி உள்ளது. 35 இடங்களில் வென்ற திரிணாமுல் காங்கிரஸ் 22ல் மட்டுமே வென்றுள்ளது. மீதமுள்ள இடங்கள் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் ஹுமாயூன் கபீரின் ஏஜேயுபி உள்ளிட்ட கட்சிகள் கலவையாக பெற்றுள்ளன. இது திரிணாமுல் காங்கிரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய சிறுப்பான்மையினர் வாக்குகள் பிளவுபட்டதை காட்டுகிறது.

எஸ்ஐஆர் நடவடிக்கையை மம்தா கடுமையாக எதிர்த்ததன் மூலம் சிறுபான்மையினர் ஓட்டுகளை முழுமையாக பெற முடியும் என எண்ணினார். ஆனால் தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாக அமைந்தன. 66 சதவீதத்திற்கும் அதிகமாக முஸ்லிம்கள் இருக்கும் முர்ஷிதாபாத் மாவட்டம் திரிணாமுல் காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்டது. அங்கு 2021ல் 22 இடங்களில் 20ஐ திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றிய நிலையில் இம்முறை, 9 இடங்களில் மட்டுமே வென்றது. பாஜ 9 இடங்களை கைப்பற்றியது. கடந்த தேர்தலில் அங்கு 2 இடங்களில் மட்டுமே பாஜ வென்றிருந்தது.

டோம்கலில் மார்க்சிஸ்டின் வெற்றி, சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இடதுசாரிகளின் செல்வாக்கு மீண்டும் புத்துயிர் பெற்றதை காட்டுகிறது. ரெஜிநகர், நவுடாவில் ஏஜேயுபி வென்றுள்ளது. இந்த தொகுதிகள் பொதுவாக திரிணாமுல் காங்கிரசுக்கு கிடைக்கக் கூடியவை. திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், காங்கிரஸ் என எதிர்க்கட்சிகள் தனித்தனியாக பிரிந்து நின்றதன் பாதிப்பையும் இது காட்டியது.

முஸ்லிம் ஓட்டுக்களை பாஜ மட்டுமின்றி காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ஏஜேயுபி உள்ளிட்ட கட்சிகள் பிரித்தது மட்டுமின்றி இந்துக்களின் ஓட்டுக்களை பாஜ ஒருங்கிணைத்தது அக்கட்சியின் வரலாற்று சாதனை வெற்றிக்கு வித்திட்டுள்ளது. கண்டி, நபாகிராம் போன்ற தொகுதிகளில் பாஜ ஒன்றுபட்ட இந்துக்கள் வாக்குகளை பயன்படுத்தி, பிளவுபட்ட எதிர்க்கட்சி அணிகளை வீழ்த்தியது.

இதே போல தெற்கு 24 பர்கனாஸ், பீர்பூம் மாவட்டங்களிலும் சிறுப்பான்மையினர் மற்றும் இந்துக்கள் வாக்குகளை பெற்று பாஜ வெற்றி அடைந்தது. இதுமட்டுமின்றி அமைப்பு ரீதியாகவும் திரிணாமுல் காங்கிரசின் பலவீனம் வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. தலைமைக்கும் தொண்டர்களுக்கும் இடையேயான இணைப்பு முற்றிலும் முறிந்துள்ளது. இது அடுத்ததாக தலைமை பொறுப்பை ஏற்கும் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

* 9 மாவட்டங்களில் மம்தா கட்சி ஒயிட்வாஷ்
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 23 மாவட்டங்களில் 9 மாவட்டங்களில் திரிணாமுல் காங்கிரஸ் ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை. பூர்பா மேதினிப்பூர் மாவட்டத்தில் 16 தொகுதிகளையும் பாஜ கைப்பற்றியது. கடந்த தேர்தலில் 15ல் வென்றிருந்த நிலையில் எஞ்சிய 1 தொகுதியையும் இம்முறை பாஜ கைப்பற்றியது. மலைப்பகுதிகளான டார்ஜிலிங், காலிம்போங், ஜல்பைகுரி, அலிபுர்துவார் ஆகிய 4 மாவட்டங்களிலும் 18 தொகுதிகளில் ஒன்றைக் கூட திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் கைப்பற்ற முடியவில்லை.

வனங்கள் சூழ்ந்த பகுதிகளான புருலியா, பாங்குரா, ஜார்கிராம் மாவட்டங்களில் உள்ள 25 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இப்பகுதிகள் கணிசமாக பழங்குடியினர் வசிப்பவை. இதனால், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தி பாஜ வெற்றி பெற்றது. திரிணாமுல் காங்கிரசில் இருந்து முக்கிய தலைவர்களை வளைத்து, மேற்கு வர்த்தமான் மாவட்டத்தில் 9 தொகுதிகளையும் பாஜ முழுமையாக கைப்பற்றியது.

* மத்திய பார்வையாளராக அமித்ஷா நியமனம்
மேற்கு வங்கம் மற்றும் அசாமில் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பணிகளை தொடங்க பாஜ கட்சியின் மத்திய பார்வையாளர்கள் நேற்று நியமிக்கப்பட்டனர். இதில் மேற்கு வங்கத்தின் மத்திய பார்வையாளராக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளார். துணை பார்வையாளராக ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா அறிவிக்கப்பட்டுள்ளார். அசாம் மாநில பாஜ மத்திய பார்வையாளராக அரியானா முதல்வர் நயப் சிங் சைனியும், துணை பார்வையாளராக ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஞ்சியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

* தேர்தல் முறைகேட்டில் தேறிவிட்டது தேர்தல் ஆணையம்
மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்தி தனது எக்ஸ் பதிவில், ‘‘விஸ்வகுரு ஆகாமல் இருந்திருக்கலாம், ஆனால் தேர்தல் முறைகேடு செய்யும் கலையில் நாம் தேர்ச்சி பெற்றிருப்பதாக தெரிகிறது. இந்த மோசமான நிதர்சனத்திற்கு மேற்கு வங்கம் சமீபத்திய நினைவூட்டல். டி.என்.சேஷன் தேர்தல் ஆணையத்தை ஜனநாயகத்தின் அச்சமற்ற பாதுகாவலனாக மாற்றிய பிறகு, இந்தியா சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான உலகளாவிய முன்மாதிரியாக போற்றப்பட்டது. ஆனால் இன்று, அதே நிறுவனம் ஒன்றிய அமைப்புகளின் உதவியுடன் தேர்தல் செயல்முறையைச் சீர்குலைப்பது துயரமான வீழ்ச்சி’’ என கூறி உள்ளார்.

* 35 அமைச்சர்களில் 22 பேர் படுதோல்வி
மம்தா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 35 அமைச்சர்களில் 22 பேர் தோல்வி அடைந்துள்ளனர். இது அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை காட்டுவதாகவும், பல அமைச்சர்கள் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றதாகவும் பாஜவினர் கூறுகின்றனர்.

* மொட்டையடித்து தர்ப்பணம் செய்த பாஜ எம்எல்ஏ
பஹராம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜ வேட்பாளர் சுப்ரதா மைத்ரா நேற்று மொட்டையடித்து, கடந்த 2021ல் கொல்லப்பட்ட பாஜ தொண்டர்களுக்கு தர்பணம் அளித்தார். அவர் கூறுகையில், ‘‘கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் பாஜ தொண்டர்கள் பல கொல்லப்பட்டனர். அவர்களின் ஆன்மாக்களின் அமைதிக்காகவே இறுதி சடங்கை செய்தேன். அவர்களின் பங்களிப்பு இல்லாவிட்டால் பாஜவால் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது’’ என்றார்.

* பாஜவின் வெற்றி 207 தொகுதியாக அதிகரித்தது
ராஜர்ஹாட் நியூடவுன் தொகுதியில் மட்டும் நேற்று மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது. குறைவான வாக்கு வித்தியாசம் காரணமாக சில வேட்பாளர்கள் தேர்தல் முடிவில் சந்தேகம் கிளப்பினார். இதனால் மறுவாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில் நேற்று முன்தினம் 17 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டிருந்தன.

இறுதியான 18வது சுற்று எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் 309 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜ வேட்பாளர் பியூஷ் கனேடியா, 2 முறை சிட்டிங் எம்எல்ஏவான திரிணாமுல் காங்கிரசின் தபஸ் சட்டர்ஜியை வீழ்த்தினார். இதன் மூலம் பாஜவின் பலம் 207 ஆக அதிகரித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 80 தொகுதிகளில் வென்றுள்ளது.

* மக்கள் விருப்பமே முதன்மையானது
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்தார் நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘மக்கள் விருப்பமே முதன்மையானது. மேற்கு வங்க மக்கள் பாஜவை விரும்பியிருப்பதால், அது அவர்களுக்கு கிடைத்துள்ளது. நாங்கள் அதை மதிக்கிறோம். சமமற்ற களத்தில், கற்பனை செய்ய முடியாத அளவிலான சவால்களுக்கு எதிராக சிறந்த போராட்டத்தை முன்னெடுத்தோம். அதற்காக எனது தலைவரையும், எனது கட்சியையும் நினைத்து பெருமை கொள்கிறேன். மதச்சார்பற்ற தேசத்திற்கான போராட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து முன்னெடுக்கும்’’ என்றார்.

Related Stories: