புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். விசாரணையில், முத்தியால்பேட்டையை சேர்ந்த காக்கா (எ) கருணாஸ் (18), விவேகானந்தன் (56) ஆகிய இருவரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த 2024 செப்டம்பர் 16ம்தேதி சிறையில் உள்ள கழிப்பறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த வந்த போக்சோ விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுமதி, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கருணாஸ் குற்றவாளி என கடந்த 30ம் தேதி அறிவித்தார். தண்டனை விவரங்கள் மே 5ம்தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார். அதன்படி, இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பச்சையப்பன், சிறுமி குடும்பத்தின் தரப்பில் ஆஜரான வக்கீல், 20 பக்கங்கள் கொண்டு எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்தனர்.
குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிட்டனர். அதற்கு நீதிபதி சுமதி, குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென்றால், அரசு தரப்பில் இருந்து குற்றவாளியின் குடும்ப விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
