உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 38ஆக உயர்வு: ஒன்றிய அமைச்சரவை அனுமதி

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணக்கையை 34ல் இருந்து 38ஆக உயர்த்த ஒன்றிய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் இந்தியத் தலைமை நீதிபதி உட்பட, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கையை தற்போதுள்ள 34லிருந்து 38ஆக உயர்த்தும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் 33 நீதிபதிகளும், இந்தியத் தலைமை நீதிபதியும் உள்ளனர்.

இந்த எண்ணிக்கையுடன் கூடுதலாக 4 நீதிபதிகளை உயர்த்தி 38ஆக மாற்றும் மசோதா, நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும். நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை, இந்தியத் தலைமை நீதிபதி உட்பட 38ஆக உயரும். கடைசியாக 2019ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தச் சட்டத்தின் மூலம், நீதிபதிகள் எண்ணிக்கை 30லிருந்து 34 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது அந்த எண்ணிக்கையை 38 ஆக உயர்த்த ஒன்றிய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

கரும்பு விலை உயர்வு: அக்டோபரில் தொடங்கவுள்ள 2026-27 கரும்புப் பருவத்திற்கு, சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச விலையை, ஒன்றிய அரசு குவிண்டாலுக்கு ரூ.10 உயர்த்தி, ரூ.365 ஆக நிர்ணயித்தது. 10.25 சதவீத அடிப்படை சர்க்கரை மீட்பு விகிதத்திற்கு பிறகு இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் குவிண்டாலுக்கு ரூ.355 விலை உள்ளது.

பருத்தி விளைச்சல்: பருத்தி விளைச்சலை அதிகரிக்க 5 ஆண்டுத் திட்டத்திற்கு ரூ.5,659.22 கோடி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2025-26 பயிர் ஆண்டில் (ஜூலை முதல் ஜூன் வரை), இந்தியாவின் பருத்தி உற்பத்தி தலா 170 கிலோ எடையுள்ள 291 லட்சம் பேல்களாக (கட்டுகளாக) பதிவாகியுள்ளது.

குஜராத்தில் கப்பல் பழுதுபார்க்கும் மையம்: குஜராத் மாநிலம் வடினாரில், ரூ. 1,570 கோடி முதலீட்டில் அதிநவீன கப்பல் பழுதுபார்க்கும் மையத்தை அமைப்பதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது . தீன்தயாள் துறைமுக ஆணையம் மற்றும் கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம் ஆகியவை மூலம் இந்த திட்டம் இணைந்து செயல்படுத்தப்படும். இதற்கான மொத்த முதலீடு ரூ. 1,570 கோடியாக இருக்கும். இதில் 650 மீட்டர் நீளமுள்ள கப்பல்துறை , இரண்டு பெரிய மிதவை உலர் கப்பல்துறைகள் , பணிமனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடல்சார் உள்கட்டமைப்புகள் ஆகியவை இடம்பெறும்.

குறு, சிறு தொழில்களுக்கு கடன் உத்தரவாதம்: மேற்கு ஆசிய மோதலால் ஏற்பட்ட சவால்களுக்கு மத்தியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் , விமான நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் நடைமுறை மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் வகையில், ரூ. 18,100 கோடி ஒதுக்கீட்டில் அவசரக் கடன் உத்தரவாதத் திட்டம் ஒன்றை அரசு அறிவித்தது. ரூ. 5,000 கோடி உட்பட, மொத்தம் ரூ. 2.55 லட்சம் கோடி அளவிற்கான கூடுதல் கடன் வழங்க உதவும் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்திற்கு, ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

2 செமி கண்டக்டர் ஆலை: ரூ. 3,936 கோடிக்கும் அதிகமான மொத்த முதலீட்டில் மேலும் இரண்டு செமி கண்டக்டர் உற்பத்தி அலகுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஆலைகள் குஜராத் மாநிலத்தில் நிறுவப்படவுள்ளன. சுமார் ரூ. 3,936 கோடி மொத்த முதலீட்டில் அமையவுள்ள இத்திட்டங்கள் மூலம், மொத்தம் 2,230 திறமையான தொழில் வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* 3 ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி
ரயில்வே அமைச்சகத்தின் ரூ.23,437 கோடி மதிப்பிலான 3 திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.  நாக்தா-மதுரா, குண்டக்கல்-வாடி மற்றும் பர்ஹ்வால்-சீதாப்பூர் ஆகிய வழித்தடங்களுக்கு இடையே மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் பாதைகளை அமைக்கும் பணிகள் இத்திட்டங்களில் அடங்கும்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பரவியுள்ள 19 மாவட்டங்களை உள்ளடக்கிய இம் மூன்று திட்டங்களும், இந்திய ரயில்வேயின் தற்போதைய வழித்தட அமைப்பை சுமார் 901 கி.மீ. அளவுக்கு விரிவுபடுத்தும்.

மகாகாளேஸ்வர், ரந்தம்பூர் தேசியப் பூங்கா, குணா தேசியப் பூங்கா, கியோலாடியோ தேசியப் பூங்கா, மதுரா, பிருந்தாவனம், மந்திராலயம் (ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம்), ஸ்ரீ நெட்டிக்கண்டி ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் (காசாபுரம்), ஷியாம்நாத் திருக்கோவில், நைமிஷாரண்யம் (நீம்சார்) உள்ளிட்ட இடங்களை இணைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: