புதுச்சேரி: வெவ்வேறு கட்சிகளின் மூலம் லாட்டரி அதிபர் மார்ட்டினி மனைவி, மகன், மருமகன் ஆகியோர் எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சியை உருவாக்கிய பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் சார்லஸ் மார்ட்டின், தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து காமராஜ் நகரில் போட்டியிட்டார். இதுபோன்று இவரது தாய் லீமா ரோஸ் திருச்சி மாவட்டம் லால்குடியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார்.
லீமா ரோஸின் மருமகன் ஆதவ் அர்ஜூனா தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில் இவர்கள் 3 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். அதன்படி புதுச்சேரி காமராஜ் நகரில் 10,205 வாக்கு வித்தியாசத்தில் சார்லஸ் மார்ட்டின் மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் அவர், புதுவை சட்டசபையில் காலடி எடுத்து வைக்கிறார்.
மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக களம் இறங்கி 2,731 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரது மருமகன் ஆதவ் அர்ஜூனா தவெக சார்பில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 17,302 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இப்படி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் எம்எல்ஏவாக தேர்வாகி இருப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
