கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண் உரலால் தாக்கி கொலை: 3 சகோதரர்கள் கைது

 

திருமலை: குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்த இளம்பெண் உரலால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மிர்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளிகிருஷ்ணா(38). இவரது மனைவி லட்சுமி பிரசன்னா(30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, லட்சுமி பிரசன்னா தனது கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் அவருக்கு நிடுமோலு கிராமத்தை சேர்ந்த அய்யப்பா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். தாயின்றி தவித்த குழந்தைகளின் நிலையை அறிந்து வேதனை அடைந்த முரளிகிருஷ்ணாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் மனைவி லட்சுமிபிரசன்னாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி நேற்று அதிகாலை முரளிகிருஷ்ணா, தனது 2 சகோதரர்களுடன் லட்சுமிபிரசன்னா தங்கியிருந்த காந்திநகர் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த லட்சுமிபிரசன்னாவுக்கும் முரளிகிருஷ்ணாவுக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த முரளிகிருஷ்ணா உள்பட 3 பேரும் சேர்ந்து லட்சுமிபிரசன்னாவின் தலையில் உரலால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து முரளிகிருஷ்ணா மற்றும் அவரது 2 சகோதரர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: