முதலமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்ய மாட்டேன்: மம்தா பானர்ஜி திட்டவட்டம்

கொல்கத்தா: முதலமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடந்தது. 4வது முறையாக ஆட்சியை பிடிக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்தார். பாஜ முதல் முறையாக ஆட்சியை கைப்பற்ற பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் மிகத்தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

இரு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டிக்கு மத்தியில், வாக்குப்பதிவில் வரலாறு காணாத வகையில் 92.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இதனிடையே நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜ 207 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றியுடன் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களை கைப்பற்றி தோல்வி அடைந்தது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மம்தா பானர்ஜி; மேற்கு வங்கத்தில் மக்களாட்சி படுகொலை செய்யப்பட்டுள்ளது; மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தோற்கவில்லை. மேற்கு வங்க தேர்தலில் ஒன்றிய பாஜக அரசு நேரடியாக இடையூறு செய்தது.

வாக்கு எண்ணிக்கை மிகவும் அநீதியான முறையில் நடந்துள்ளது. நிஜ வில்லன் தேர்தல் ஆணையம்தான். பாஜக மட்டுமின்றி தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் நாங்கள் போராடினோம். நீதிமன்றம் கூட எங்களுக்கு நீதி வழங்கவில்லை. மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்தப்பட்டவிதம் ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவாலாகும். முதலமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறினார்.

Related Stories: