புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப். 9ம் தேதி நடந்தது. இதில் ஆளும் என்ஆர்.காங்கிரஸ், பாஜ, அதிமுக, லஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு அணியாகவும், திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி ஒரு அணியாகவும் போட்டியிட்டன. இதேபோல், தவெக, நேயம் மக்கள் கழகத்துடன் இணைந்தும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் தபால் வாக்குகள் 1.36 சதவீதம் உட்பட மொத்தம் 91.2 3சதவீதம் வாக்குகள் பதிவானது. புதுச்சேரி தேர்தல் வரலாற்றிலேயே இது அதிகபட்ச சதவீதமாகும். மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தட்டாஞ்சாவடி, மங்கலம் தொகுதிகளில் என்ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி, ஏனாமில் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், நெட்டப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ராஜவேலு, முத்தியால்பேட்டையில் முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன்,
லாஸ்பேட்டையில் முன்னாள் சபாநாயகர் வி.பி.சிவக்கொழுந்து, வில்லியனூரில் ரவிக்குமார், அரியாங்குப்பத்தில் ஐயப்பன், காரைக்கால் வடக்கில் அமைச்சர் திருமுருகன், ஏம்பலத்தில் மோகன்தாஸ், இந்திராநகரில் ஏகேடி.ஆறுமுகம் எம்எல்ஏ., உழவர்கரையில் நாராயணசாமி என என்ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பாஜவில் மண்ணாடிப்பட்டு அமைச்சர் நமச்சிவாயம், நிரவி திருபட்டினம் மீனாட்சி சுந்தரம், திருநள்ளாறு ராஜசேகரன், முதலியார்பேட்டை முன்னாள் அமைச்சர் ஜான்குமார் எம்எல்ஏ ஆகிய 4 பேரும், உப்பளத்தில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகனும், காமராஜ்நகர் தொகுதியில் லஜக தலைவர் சார்லஸ் மார்ட்டினும் வெற்றி பெற்றுள்ளனர்.
திமுகவில் ராஜ்பவன் விக்னேஷ் கண்ணன், காலாப்பட்டு செந்தில், பாகூர் செந்தில்குமார் எம்எல்ஏ., காரைக்கால் தெற்கு முன்னாள் அமைச்சர் நாஜிம் எம்எல்ஏ., நெல்லித்தோப்பு கார்த்திகேயன் ஆகிய 5 பேர் வெற்றிபெற்றுள்ளனர். காங்கிரசுக்கு ஊசுடு தொகுதி மட்டுமே கிடைத்துள்ளது. அதில் முன்னாள் எம்எல்ஏ கார்த்திகேயன் வெற்றிபெற்றுள்ளார். தவெகவில் மணவெளி ராமு, திருபுவனை முன்னாள் அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார் எம்எல்ஏ., ஆகிய 2 பேரும், தவெக கூட்டணியான நேயம் மக்கள் கழகம் உருளையன்பேட்டையில் நேரு (எ) குப்புசாமி எம்எல்ஏவும் வெற்றிபெற்றுள்ளனர்.
மேலும், கதிர்காமம் அழகு (எ) அழகானந்தம், நெடுங்காடு டாக்டர் விக்னேஷ், மாகேவில் சிபிஎம் ஆதரவு பெற்ற அசோக் என 3 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். ஆளும் தேஜ கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் புதுச்சேரியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. முதல்வர் ரங்கசாமி 5வது முறையாக முதல்வர் அரியணையில் ஏறுகிறார். இந்த வெற்றியை என்ஆர்.காங்., பாஜ, அதிமுக, லஜக கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
* பெண் எம்எல்ஏக்கள் இல்லாத சட்டப்பேரவை
புதுச்சேரியில் பெண்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு செல்வது அரிதாக இருக்கிறது. இதற்கிடையே கடந்த 2016ல் சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக சந்திரபிரியங்கா, கோபிகா, விஜயவேணி, கீதாஅனந்தன் ஆகிய 4 பேர் வெற்றி பெற்றனர். அதன்பிறகு கடந்த 2021 தேர்தலில் சந்திரபிரியங்கா மட்டுமே வெற்றி பெற்று அமைச்சரானார். அதன் பின்னர் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் திருபுவனை தொகுதியில் கோபிகாவும், நெடுங்காடு தொகுதியில் சந்திரபிரியங்காவும், காங்கிரஸ் சார்பில் அரியாங்குப்பம் தொகுதியில் விஜயலட்சுமியும், உழவர்கரை தொகுதியில் விசிக சார்பில் புஷ்பலதாவும் போட்டியிட்டனர். ஆனால், இம்முறை பெண் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியை தழுவினர். இதனால் இந்த முறை பெண் எம்எல்ஏக்கள் இல்லாத சட்டசபையாக அமைந்துள்ளது.
* ‘பதவியேற்பு தேதி பின்னர் தெரிவிக்கப்படும்’
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அளித்த பேட்டியில், புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக என்டிஏ அரசு ஆட்சி புரிந்தது. அதற்கு அங்கீகாரம் தரும் வகையில் மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர், நன்றியோடு வாக்களித்துள்ளனர். வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி. எம்பி வைத்திலிங்கம் 4வது இடம் தள்ளப்பட்டதை கேட்கிறீர்கள். அவரை எம்பியாக்கி மக்கள் அனுப்பிய நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கு வந்திருக்கக்கூடாது. பதவியேற்பு தேதி பின்னர் தெரிவிக்கப்படும். விரைவில் ஆளுநரை சந்திப்பேன் என்றார்.
