பழிவாங்க நினைக்காமல் மாற்றத்திற்காக பணியாற்ற வேண்டும்: பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பாஜ வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டெல்லியில் பாஜ கட்சி தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி நேற்று மாலை தொண்டர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: இன்றைய நாள் பல வகையிலும் சிறப்பான ஒன்று. இது நாட்டிற்கு பொன்னான எதிர்காலத்தை அறிவிப்பதாக அமைந்துள்ளது. இது ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வின் மீதான நம்பிக்கைக்கும் உரிய நாளாகும்.

மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் கேரள மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். இன்று மேற்கு வங்கத்தில் பெற்ற வெற்றியின் மூலம் கங்கோத்திரியிலிருந்து (உத்தரகாண்ட்) கங்காசாகர் (மேற்கு வங்கம்) வரை எங்கும் முழுமையாக மலர்ந்திருப்பது தாமரை மட்டுமே. உத்தரகாண்ட், உபி, பீகார் மற்றும் மேற்க வங்கம் என அன்னை கங்கையை சூழ்ந்துள்ள இந்த மாநிலங்கள் அனைத்திலும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகளே அமைந்துள்ளன.

மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலில் அச்சத்திற்கு பதிலாக ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது. அனைத்து கட்சிகளும் பழிவாங்கும் உணர்வின்றி மாற்றத்திற்காக பணியாற்ற வேண்டும். அச்சத்தை விட மாநிலத்தின் எதிர்காலமே மேலோங்கி நிற்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த தேர்தலில் பெண்களின் பங்கேற்பு மிக அதிகமாக இருந்துள்ளது. பல ஆண்டுகால தவம் பெரும் சாதனையாக உருமாறும்போது முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியை இன்று நாடு முழுவதும் உள்ள பாஜ தொண்டர்களின் முகங்களில் காண்கிறேன் என்றார்.

Related Stories: