திருமலை: முதல்வரை சந்திக்க என்னை தொடர்பு கொள்ளுங்கள் என தலைமை செயலகம் முன்பு ரீல்ஸ் வெளியிட்ட போலி போலீசை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநில தலைமை செயலக வளாகத்தில் ஒரு வாலிபர் காவலர் உடையில் நின்று, ‘நான் முதல்வர் பாதுகாப்பு பிரிவில் பணி புரிகிறேன், முதல்வரை சந்திக்க வேண்டும் என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்’ என செல்பி வீடியோ எடுத்து வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், காவலர் உடையில் இருந்தது தத்தூரி ரவி என்கிற சரண் யாதவ்(31) என்பது தெரியவந்தது. அவர் காவல்துறை மீதுள்ள ஈர்ப்பு காரணமாக வாடகைக்கு காவலர் உடை வாங்கி இன்ஸ்டா ரீல்ஸ் செய்ததுள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் காவலர் சீருடை, ஒரு மொபைல் போனை பறிமுதல் செய்தனர். மேலும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற ஆள்மாறாட்டக்காரர்களிடம் ஏமாறாமல், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
