சண்டிகர்: ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்பிக்கள் பாஜவுக்கு மாறிய நிலையில் பஞ்சாப் சட்டமன்றத்தில் இருந்து ஆம் ஆத்மியின் 65 அல்லது 40 எம்எல்ஏக்கள் கட்சி மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இதனை தொடர்ந்து முதல்வர் பக்வந்த் மான் அரசுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல்வர் பக்வந்த் மான் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி அரசானது நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று கட்சிக்குள் ஸ்திரத்தன்மை இல்லை என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த கூட்டத்தின்போது, ஊதிய திருத்தம் குறித்த அதிகாரப்பூர்வ தீர்மானத்தை சபாநாயர் வாசித்துக்கொண்டு இருந்தார்.
அப்போது முதல்வருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எதிர்க்கட்சி எம்எல்ஏ கைரா முதல்வர் மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது முதல்வர் மது அருந்திவிட்டு அவைக்கு போதையில் வந்துள்ளதாகவும், அவருக்கு மதுஅருந்தி இருக்கிறாரா என்று பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியதாக தெரிகின்றது. இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. சபாநாயகர் உறுப்பினர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் முதல்வர் மற்றும் கைரா இருவரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஒருவரையொருவர் விரல்களை நீட்டிப்பேசிக்கொண்டனர். அவையில் எழுப்புவதற்கு எந்த பிரச்னையும் இல்லாததால் எதிர்க்கட்சிகள் இதுபோன்று சர்ச்சையை எழுப்புவதாக முதல்வர் பகவந்த் மான் கூறினார்.
