புதுடெல்லி: மேற்குவங்க பேரவை தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் மாநில அரசு ஊழியர்களுக்கு பதிலாக, ஒன்றிய அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களை மட்டுமே நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு ஊழியர்கள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் ஒன்றிய பாஜ அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் வாக்கு எண்ணிக்கையில் அவர்கள் பாரபட்சமாக செயல்படுவார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதன் காரணமாக தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை கடந்த 30ம் தேதி விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், “வாக்கு எண்ணுபவர்களை நியமிக்கும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தில் தலையிட முடியாது” என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் மேற்குவங்க தேர்தல் பணியில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஈடுபடுவது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு அவசர வழக்காக விசாரிக்க உள்ளது.
