குன்றத்தூர், ஏப்.29: குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்ட விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரினை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற திருநாகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. நவக்கிர பரிகார தலங்களில் ராகு தலமாக இக்கோயில் விளங்குகிறது. இதனால் குன்றத்தூர் மட்டுமின்றி சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோயிலில் சித்திரை மாத பிரமோற்சவ விழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த பிரமோற்சவ விழாவின் 7வது நாளான நேற்று காலை மகாரத உற்சவமான தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. பின்னர், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் திருநாகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, `ஓம் நமசிவாய’ எனும் மந்திரம் முழங்க தேரை வடம் பிடித்து, முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். கோயிலின் முக்கிய மாட வீதிகள் வழியாக தேர் ஊர்வலமாக சென்றது.
இதில், குன்றத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே தண்ணீர், மோர், குளிர் பானங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. அசம்பாவித சம்பவம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் குன்றத்தூர் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தேர் திருவிழாவை முன்னிட்டு வாகனங்கள் அனைத்தும் குன்றத்தூர் பஜார் பகுதியில் வராமல், வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.
