வடநெம்மேலி முதலை பண்ணையில் சுற்றுலா பயணிகளை கவரும் இந்திய மலை பாம்புகள்

 

மாமல்லபுரம், ஏப்.20: மாமல்லபுரம் அடுத்த, வடநெம்மேலி முதலை பண்ணையில் 2 புதிய மலை பாம்புகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். மாமல்லபுரம் அடுத்த, வடநெம்மேலியில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி முதலை பண்ணை உள்ளது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய முதலை பண்ணையாகும். இங்கு, அமெரிக்காவில் உள்ள அலிகேட்டர், நன்னீர் முதலைகள், நீள வாய் உடைய முதலைகள், சதுப்பு நிலத்தில் வாழும் முதலைகள், உப்பு நீரில் வாழும் முதலைகள் உள்ளிட்ட அரியவகை முதலைகள் இங்குள்ள குளத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், அமெசான் மற்றும் ஆப்பிரிக்க காடுகளில் உள்ள நீர் நிலைகளில் வாழ்ந்து, மனிதர்களை அப்படியே விழுங்கும் மிகப்பெரிய ராட்சத முதலைகளும் இங்குள்ளது. இந்நிலையில், வட நெம்மேலி முதலை பண்ணையில் சிறு வயதில் இருந்து அங்கேயே வளர்க்கப்பட்ட 2 இந்திய மலை பாம்புகள், பெரிய அளவில் வளர்ந்துள்ளது.

அந்த பாம்புகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக கண்ணாடி அறையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முதலை பண்ணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர், அந்த மலைபாம்புகளை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து செல்போனில் போட்டோ எடுத்தனர். சில பயணிகள் கண்ணாடி அறைக்கு முன்பு நின்று பயத்தோடு செல்பி எடுத்து மகிழ்ந்ததை காண முடிந்தது.

Related Stories: