தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் செல்வோருக்காக 10,663 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கிளாம்பாக்கம், ஏப்.19: சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு பயணிக்க உள்ளதால், 10,663 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் வசதிக்காக சென்னையில் பேருந்து நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் 21ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் வேட்பாளர்கள் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொருபுறம் பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

வாக்குப்பதிவை அதிகரிக்க 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தேர்தல் ஆணையம் அதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களை தமிழக முழுவதும் செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் 23ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக மொத்தம் 10,663 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று ஜனநாயக கடமையாற்ற தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான விரிவான திட்டத்தை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,574 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஏப்ரல் 21ம் தேதி 3,496 பேருந்துகளும், 22ம் தேதி 5,662 பேருந்துகளும், 23ம் தேதி 1,505 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மொத்தமாக ஏப்ரல் 21ம் தேதி முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை 10,663 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பேருந்து நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, நெல்லை, சேலம், கோவை, கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

கிளாம்பாக்கம் மாநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள், வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை செல்லும் வழக்கமான பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மற்ற பேருந்து நிலையங்களுக்குச் செல்ல ஏதுவாக 24 மணி நேரமும் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க www.tnstc.in என்ற இணையதளம் அல்லது TNSTC செயலி மூலமாக முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம். பேருந்து இயக்கம் குறித்த சந்தேகங்களுக்கு 94450 14436 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்தில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் மூலம் பேருந்து இயக்கம் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: