இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முன்னிட்டு பொதுமக்களுக்கும், வாக்காளர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்

செங்கல்பட்டு, ஏப்.23: இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடப்பதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வாக்குசாவடி மையங்களில் பொதுமக்களுக்கும், வாக்காளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவேண்டும் என்று துறை அதிகாரிகளுக்கு தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மாலதி ஹெலன் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் இன்று சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் போக்குவரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை ஆகிய துறைகள் மூலம் செய்து தரவேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து கலந்தா லோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான எஸ்.மாலதி ஹெலன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறையினர் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய நிர்வாகத்தினருடன் இணைந்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், வாக்குப்பதிவு நாளான இன்றும், முன்தினமான நேற்றும் வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் போக்குவரத்து சம்பந்தமாக தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரவேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், சுகாதாரத்துறையினர் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ சேவைகளை செய்து தருவதை உறுதிபடுத்த வேண்டும், சுங்கச்சாவடிகள், வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ சேவைகளை செய்து தரவேண்டும் என கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் பொதுமக்களுக்கும், வாக்காளர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்தை உறுதிசெய்ய வேண்டும் என்று போக்குவரத்து துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தி ஆலோசனை வழங்கினார். அப்போது போக்குவரத்து துறையினர், சுகாதாரத்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், காவல் துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் என இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

Related Stories: