குன்றத்தூர்,ஏப்.20: குன்றத்தூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாததால், பைக்கில் கொண்டு வரப்பட்ட ரூ.20 லட்சம் நகைகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். வரும் 23ம் தேதி தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் இணைந்து ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நேற்று திருமுடிவாக்கம் போலீசார் வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சிட்கோ அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு பைக்கில் அலுமினிய பெட்டியுடன் வந்த இரண்டு நபர்களை போலீசார் மடக்கி சோதனை செய்து பார்த்த போது, அவர்களிடம் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த நகைகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. மொத்தம் அதில் 177 கிராம் தங்கம், 33 கிராம் வெள்ளி, 2 கிராம் பிளாட்டினம் ஆகியவை இருந்தது.
திருமுடிவாக்கம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நகைக்கடையின் நகைகள் செய்யும் கம்பெனி செயல்பட்டு வரும் நிலையில், அங்கு தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றை எடுத்து வந்த நகைகளாக மாற்றுவதற்கு எடுத்து வந்தது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.19 லட்சத்து 94 ஆயிரம் என்று கூறப்படுகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட தங்கம் மற்றும் பிளாட்டினம் நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
