மதுராந்தகம், ஏப்.22: அச்சிறுப்பாக்கத்தில் உள்ள ஆட்சீஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி ஆகிய நால்வரால் பாடல் பெற்ற கோயிலாக ஆட்சீஸ்வரர் கோயில் புகழ்பெற்று திகழ்ந்து வருகிறது. இங்கு ஆண்டுதோறும் இக்கோயிலின் சித்திரை பெருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை பெருவிழா நேற்று தொடங்கி மே 2ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த விழாக்களை ஒட்டி ராஜகோபுரம் உள்பிரகார சன்னதிகள் ஆகியவை வண்ண விளக்குகளால் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, சித்திரைப் பெருவிழா நேற்று காலை மங்கல இசையுடன் ஆட்சிஸ்வரர், இளங்கிளி அம்மன் நந்தி ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள்ளாக ராஜகோபுரம் அருகில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோயில் அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றி வைத்து சித்திரை விழாவை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சூரிய பிறை, அதிகார நந்தி, திருமுல்லைப்பால் உற்சவம், 63 நாயன்மார்கள் உற்சவம், அன்னவாகனம், யாழிவாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து 27ம் தேதி திங்கட்கிழமை தேர்த் திருவிழா நடைபெற உள்ளது. மேலும் தொட்டி உற்சவம், தீர்த்தவாரி, அகஸ்தியருக்கு காட்சி கொடுத்தல், விடையாற்றி உற்சவம் என மே 2ம் தேதி வரை இக்கோயிலில் நிகழ்ச்சிகள் 12 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் தருமன், அறங்காவலர்கள் ராஜலட்சுமி, மணிகண்டன், கபாலி, ரத்தினவேலு, இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் பிரகாஷ், செயல் அலுவலர் தமிழரசி உள்ளிட்ட விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
