மதுராந்தகம், ஏப்.25: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இந்நிலையில் மதுராந்தகம், செய்யூர் ஆகிய 2 தொகுதிகளுக்குமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சீல் வைத்து வாக்குகள் எண்ணப்பட உள்ள மதுராந்தகம் சுபம் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இக்கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் மாலதி ஹெலன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், சார் ஆட்சியர் நல்ல சிவன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெங்கடாசலம், கஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
