நாமக்கல்: ரூ.50 கோடி வாடகை பாக்கி பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதால், எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலையில் தொடங்கிய ஸ்டிரைக் மாலையில் வாபஸ் பெறப்பட்டது. நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்க உறுப்பினர்களின் 2,500 காஸ் டேங்கர் லாரிகள், வாடகை ஒப்பந்த அடிப்படையில் ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய 3 ஆயில் நிறுவனங்களுக்கு சமையல் காஸ் ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதில், ஐஓசி நிறுவனம், டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு கடந்த 3 மாதமாக காஸ் லோடு ஏற்றி சென்றதற்கு வாடகை பணம் கொடுக்கவில்லை. இதை கண்டித்து, நேற்று காலை முதல் ஐஓசி நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சமையல் காஸை ஏற்றி செல்லும் பணியை காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நிறுத்தி விட்டனர். இதனால் சமையல் காஸ் லோடு இறக்கப்படாமல் கப்பலில் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஓசி நிறுவன அதிகாரிகள், எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு வேலைநிறுத்தத்தை கைவிடும்படியும், வாடகை பாக்கி பிரச்னைக்கு உடனடி தீர்வு காணப்படும் எனவும் உறுதி அளித்தனர். இதையடுத்து, நேற்று மாலை 4 மணியளவில் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்வதாக எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுந்தர்ராஜன் கூறியதாவது: கடந்த 3 மாத வாடகை பாக்கியாக ரூ.50 கோடி வரை, ஐஓசி எண்ணெய் நிறுவனம் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பாக்கி வைத்துள்ளது. இந்த பணத்தை கேட்டு பல முறை நினைவூட்டல் கடிதம், சங்கத்தின் மூலம் ஐஓசி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், பிரச்னையை தீர்க்க அவர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால், எங்களது வாகனங்களை ஐஓசி நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து நேற்று லோடு ஏற்றாமல் நிறுத்தி வைத்தோம். ஐஓசி உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து பாக்கித் தொகையையும் கொடுத்து விடுவதாக மின்னஞ்சல் மூலம் உறுதியளித்துள்ளனர். இந்த உறுதிமொழியை ஏற்று எங்களது வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
