கரூர்: சட்ட விரோதமாக மணல் பதுக்கி வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். டவுன் காவல் நிலையத்தில் ஒரு வாரம் ஆஜராகி கையெழுத்திடும்படி உத்தரவிட்டு அவருக்கு மாஜிஸ்திரேட் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த மல்லம்பாளையம் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக கூறி கடந்த பிப்ரவரி 10ம்தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுகவினர்களுடன் சென்று லாரிகள், பொக்லைன் என 10 வாகனங்களை பிடித்து வாங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதனை தொடர்ந்து, மாட்டு வண்டியில் மணல் எடுப்பதை விஜயபாஸ்கர் தடுப்பதாக கூறி மாட்டு வண்டி தொழிலாளர்கள் பிப்ரவரி 11ம்தேதி விஜயபாஸ்கர் வீட்டை முற்றுகையிட வந்தனர். போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்பிவைத்தனர். இந்நிலையில், கரூர் அருகே ஆண்டாங்கோயில் புதூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனைவிக்கு சொந்தமான இடத்தில் ஆற்று மணல் கொட்டப்பட்டு இருப்பதாக விஏஓ, கரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார், சட்டவிரோமாக மணல் கடத்தலில் ஈடுபட்டது, பதுக்கியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிந்து, அங்கிருந்த மணலை கைப்பற்றி அரசு மணல் கிடங்கிற்கு எடுத்து சென்றனர்.
இந்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் பெற்றதை அடுத்து கரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நேற்று சரணடைந்தார். இதில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய மாஜிஸ்திரேட் பரத்குமார், கரூர் டவுன் காவல் நிலையத்தில் இன்று (28ம்தேதி) முதல் ஒரு வாரத்திற்கு தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், நாளை (29ம்தேதி) நீதிமன்றத்திலும் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
