ஐகோர்ட் தீர்ப்பால் கொண்டாடிய குடிமகன்களுக்கு செக்; புதுவையில் இருந்து 90 மில்லி மது எடுத்து வந்தாலும் கைது: தமிழ்நாட்டு மதுவுக்கு மட்டுமே அரசாணை பொருந்தும்

விழுப்புரம்: வெளிமாநிலத்திலிருந்து(புதுச்சேரி உள்ளிட்ட) தனிநபர் ஒருவர் 4.5 லிட்டர் மதுவை எடுத்து வரவும், வைத்திருக்கவும் ஐகோர்ட் தீர்ப்பு அனுமதி வழங்கியதால் குடிமகன்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். தமிழ்நாட்டில் வாங்கப்படும் மதுவுக்கு மட்டுமே இது பொருந்தும். புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலத்திலிருந்து 90 மில்லி மதுவை கூட எடுத்து வந்தாலும் கைது செய்யப்படுவார்கள். மேலும் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் மது விலை குறைவு என்பதால் தமிழகத்தையொட்டியுள்ள மாவட்டங்களிலிருந்து குடிமகன்கள் அங்கு சென்று குடிப்பதையும், மதுபாட்டில்களை தங்களது சொந்த நுகர்வுக்கு வாங்கி வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் மதுபாட்டில் கொண்டு வருவதற்கு தமிழகத்தில் அனுமதியில்லை என்று காவல்துறை சோதனைச்சாவடிகளில் அவர்களை பிடித்து பறிமுதல் செய்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் காட்டுமயிலூரை சேர்ந்த வல்லரசு 1.680 லிட்டர் புதுச்சேரி மது எடுத்து வந்ததாகக்கூறி அவர்மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் நீதிபதி வழங்கிய தீர்ப்பு தற்போது தமிழகம், புதுச்சேரி குடிமகன்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டும், சமூகவலைதளங்களிலும் இந்த செய்தி வைரலாக்கப்பட்டும் வருகின்றன. அந்த தீர்ப்பில், இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுவை ஒருவர் 4.5 லிட்டர் வைத்திருக்க முடியும் என விதிகள் அனுமதிப்பதாக கூறி வல்லரசு மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் தற்போது குடிமகன்கள் இந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி புதுச்சேரியில் 4.5 லிட்டர் வரை மதுபாட்டில் கொண்டு வரலாமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

ஆனால் இதற்கு தமிழ்நாடு மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் 90மில்லி பாட்டில் எடுத்து வந்தாலும் குற்றம் தான். சட்டப்படி வழக்குபதிந்து கைது செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நீதிமன்றம் கடந்த 2017ம்ஆண்டு அரசாணையை சுட்டிக்காட்டி தீர்ப்பை கூறியிருக்கிறது. ஆனால் 4.12.2025ம் ஆண்டு திருத்தப்பட்டு வெளியிடப்பட்ட அரசாணையில், 1937ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச்சட்டத்தின் பிரிவு 4துணை பிரிவு1ன் உட்பிரிவில் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற வளாகங்களில் விற்கப்படும் மதுபானம் மற்றும் முறையாக அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதி அனுமதிகள் மூலம் இறக்குமதி செய்யப்படும் ஐஎப்எல் உட்பட, விற்கப்படும் ஐஎம்எப்எஸ்(இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள்), ஐஎப்எல்(வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள்) பீர் மற்றும் ஒயின் பிராண்டுகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.

ஏனெனில் இந்த வகை மதுபானங்கள் மட்டுமே மாநில அரசால் அறிவிப்பு, பிராண்ட், அறிமுக அரசாணைகள், இறக்குமதி அனுமதிகள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளன. பிற மாநில மதுபானங்கள் மற்றும் மாநில அரசால் அறிக்கை, பிராண்ட் அறிமுக அரசாணை, இறக்குமதி அனுமதிகள் மூலம் குறிப்பிடப்படாத அத்தகைய மதுபானங்களை அதிகபட்ச வரம்பான 4.5 லிட்டர் ஐஎம்எப்எஸ், ஐஎப்எல் 7.8 லிட்டர் பீர் அல்லது 9 லிட்டர் ஒயின் ஆகியவற்றை தனிப்பட்ட நுகர்வு அல்லது விற்பனைக்காக வைத்திருப்பது தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் பிரிவு 4(1)(சி) மற்றும் 14ன்கீழ் ஒரு குற்றமாகும் என்று தெரிவித்துள்ளனர்.

எனவே புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து 90 மில்லி மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டாலும் அது கடத்தலாகவே கருதி வழக்குபதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதனிடையே கடலூர் மாவட்டத்தில் நடந்த மதுவிலக்கு வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அம்மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: