செங்கல்பட்டு: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாவட்டத்தில் நடந்த வாக்குப்பதிவு வருமாறு: காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஆலந்தூர், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்தம் 65 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாவட்டத்தில் 123 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி தலைமையில் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலையிலிருந்து பொதுமக்கள் பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், முதல் வாக்காளர்கள் என நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தனியார் பள்ளியிலும், திமுக வேட்பாளர் நித்யா சுகுமார், முட்டவாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியிலும், தவெக வேட்பாளர் ஆர்.வி.ரஞ்சித் குமார், முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியிலும் வாக்களித்தனர். அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், வாலாஜாபாத் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் வாக்களித்தார். இதேபோன்று உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் வேட்பாளர்கள் வாக்களித்தனர். காஞ்சிபுரம் எம்பி செல்வம், அத்திவாக்கம் ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். உத்திரமேரூர் தொகுதியில் வாக்குச்சாவடி எண் 250ல் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. சுமார் 50 நிமிடங்களுக்கு பிறகு சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. இதேபோல உத்திரமேரூர் அடுத்த ஆனம்பாக்கத்தில் அரை மணி நேரம், வாலாஜாபாத் அடுத்த முத்தியால்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி எண் 22ல் இயந்திரங்கள் பழுதானதால் 20 நிமிடம் கழித்து வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி 18.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 4,016 வாக்கு வாக்குச்சாடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பாண்டூரில் உள்ள டிஇஎல்சி காபீஸ் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையாற்றினர். திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் முகமது அலி தெருவில் உள்ள லட்சுமி மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் தனது மனைவி இந்திரா ராஜேந்திரன், மகள் டாக்டர் ஆர்.பிரியதர்ஷினி, மகன் ஆர்.அத்வைத் ஆகியோருடன் பாண்டூரில் உள்ள டிஇஎல்சி காபீஸ் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு அளித்தார். திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா, மனைவி லதாவுடன் திருவள்ளூர் ஆர்எம்.ஜெயின் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு செலுத்தினார்.
பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி தனது மனைவி மாலதி கிருஷ்ணசாமி, மகள் டாக்டர் கி.தாரணி ஆகியோருடன் பட்டாபிராமில் உள்ள இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வாக்களித்தார்.
அம்பத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் கே.என்.சேகர் கள்ளிக்குப்பத்தில் உள்ள சரஸ்வதி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு செலுத்தினார். புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் கேவி.குப்பம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான பூவை. எம்.ஜெகன் மூர்த்தி ஆண்டர்சன்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார்.
ஆவடி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ராஜசிம்ம மகேந்திரா என்கிறஅஸ்வின் வேலப்பன்சாவடி பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். திருத்தணி தொகுதியில் வாக்குப்பதிவின்போது செல்போன் எடுத்து வந்த வாக்காளர்களை போலீசார் அனுமதிக்க மறுத்தனர். திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தேமுதிக வேட்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தி, மேல்திருத்தணியில் உள்ள அமிர்தபுரம் வாக்குச்சாவடி மையத்தில் அதிமுக வேட்பாளர் கோ.அரியும், குடும்பத்தினருடன் வாக்களித்தனர். கும்மிடிப்பூண்டி தொகுதியில் அடங்கிய கவரப்பேட்டை அரசு பள்ளியில் திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், தனது வாக்கை பதிவு செய்தார். கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் வீ.சுதாகர், ஊத்துக்கோட்டை, பேரிட்டிவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மொத்தமுள்ள 10 வாக்குச்சாவடியில் 203வது வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுதானது. அதனால் மாற்று இயந்திரம் பொருத்தப்பட்டு காலை 7.20 மணிக்குத்தான் வாக்குப்பதிவு தொடங்கியது.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து நேற்று மாலை ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன், சம்பந்தப்பட்ட தொகுதி வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தாம்பரம் மாநகர காவல் ஆணையர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி அய்மன் ஜமால் தலைமையில் ஆயுதம் தாங்கிய 50க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வாக்குச்சாவடி மையங்களில் செல்போன் பயன்படுத்த தடை என்பதால், மையங்களில் உள்ள துணிப்பைகளில் வைத்துவிட்டு செல்வதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சோழிங்கநல்லூர், பல்லாவரம் உள்பட 7 சட்டமன்ற தொகுதிகளில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் பிங்க்நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், மாற்றாக வேறொரு வாக்குப்பதிவு இயந்திரம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. தேவையான குடிநீர், கழிவறை மற்றும் முதலுதவி சிகிச்சை உள்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக 3 சக்கர வண்டிகளும் தயாராக வைக்கப்பட்டிருந்தது.
மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மதிய நேரத்தில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் என்பதால், காலை 6 மணியிலிருந்தே ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்களின் வாக்குகளை ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர். இதில், முதன்முறையாக வாக்குப்பதிவு செய்யும் இளம் வாக்காளர்கள் அதிகளவில் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்தனர். அனுமந்தபுத்தேரியில் உள்ள நகராட்சி ஆரம்ப பள்ளியில் மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் வாக்களித்தனர். தொடர்ந்து, 7 தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களை கலெக்டர் மாலதி ஹெலன், வருவாய் அலுவலர் கணேஷ்குமார் மற்றும் 7 தேர்தல் பார்வையாளர்கள் நேரடியாக ஆய்வு நடத்தினர். செங்கல்பட்டு தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி, நந்திவரம் கூடுவாஞ்சேரி அரசு மேல்நிலையிலும், அதிமுக வேட்பாளர் கஜா (எ) கஜேந்திரன், ரத்திமங்கலம் அரசு பள்ளியிலும் வாக்களித்தனர்.
செய்யூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகர், பெரும்பாக்கம் அரசு பள்ளியில் வாக்களித்தார். உத்திரமேரூர் தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தர், சாலவாக்கம் அரசு பள்ளியில், தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். மேலும் ஒன்றிய செயலாளர் குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல், துணை தலைவர் நந்தா ஆகியோரும் வாக்களித்தனர். மதுராந்தகம் (தனி) தொகுதி திமுக வேட்பாளர் அமுலு பொன்மலர், தனது சொந்த ஊரான பெரும்பேர்கண்டிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், தனது கணவர் சிவகுமாருடன் வாக்களித்தார். அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் திருப்போரூர் அருகே உள்ள அரசு பள்ளியில் தனது கணவருடன் வாக்குப்பதிவு செய்தார். காலை 9 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 25 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது.
திருவொற்றியூர்: மாதவரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம், மாதவரம் மந்தைவெளி தெருவில் உள்ள ஜெயகோபால் அரசு மேல்நிலைப் பள்ளியில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். சென்னை திருவிக.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி நாராயண மேஸ்திரி தெரு மாநகராட்சி பள்ளியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தனது குடும்பத்துடன் வாக்களித்தார். பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆர்.டி.சேகர், எம்கேபி. நகர் பகுதியில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் வாக்கு பதிவு செய்தார். சென்னை மேயர் பிரியா பெரம்பூர் ஜமாலியா பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர், ‘’அடுத்த ஐந்து ஆண்டுகளும் தமிழக முதலமைச்சர் ஆட்சி ஏற்றால் மட்டுமே தமிழகம் முன்னேறும். எனவே ஒவ்வொரு பொதுமக்களும் தனது ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும்’ என்றார்.
