ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்றவர்களிடம் தகராறு செய்த தமிழிசை: வாக்காளர்கள் கடும் வாக்குவாதம்

 

சென்னை: வரிசையில் நின்று வாக்களிக்க காத்திருந்தவர்களிடம் வாக்காளர்அடையாள அட்டையை கேட்டு மயிலாப்பூர் வேட்பாளர் தமிழிசை தகராறு செய்தார். தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு வாக்குச்சாவடி ஒன்றில் ஐடி கார்டு இல்லாமல் ஓட்டு போடுவதாக தமிழிசை சவுந்தரராஜன் திடீரென புகார் தெரிவித்தார். இதனால் அடையாள அட்டை சரிபார்ப்பு தொடர்பாக தமிழிசைக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து.

தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரிசையில் நின்றவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்கும்படி அவர் கேட்டார். ஒவ்வொருவரிடமாக அவர் அடையாள அட்டையை காண்பிக்கும்படி கூறினார். இதனால், வாக்காளர்களுக்கும், தமிழிசை இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்துள்ள எங்களிடம் எப்படி வாக்காளர் அடையாள அட்டையை கேட்பது என்று கேள்வி எழுப்பினர். தமிழிசை கூறுவது தவறு, வாக்காளர் அடையாள அட்டையுடன் தான் சென்றோம் என மக்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு பரபரப்பு அடங்கியது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையிட உள்ளதாக தெரிவித்த தமிழிசை, தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என வலியுறுத்தினார்.

 

Related Stories: