சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு; மக்கள் அமைதியாகவும், சுதந்திரமாகவும் வாக்களித்தனர்: அபின் தினேஷ் மோதக் பேட்டி

 

சென்னை: சென்னையில் வாக்கு பதிவு மையத்தில் மக்கள் அமைதியாகவும், சுதந்திரமாகவும் வாக்களித்தனர் என்று, போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை பெருநகர காவல் எல்லையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பொதுமக்கள் தடையின்றி வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து சென்னை பெருநகர காவல்துறை செய்துள்ளனர். குறிப்பாக சென்னையில் பதற்றமாக வாக்கு சாவடிகளை அடையாளம் கண்டு துணை ராணுவ வீரர்கள் உதவியுடன் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்காளர்கள் எளிமையாக வாக்கு அளிக்கும் வகையில் காவல்துறை பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. ராணி மேரி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் நேரில் பார்வையிட்டார். அப்போது வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி செய்யப்பட்டுள்ள சிசிடிவி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அங்கு பணியில் இருந்து காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பிறகு பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கு உணவு மற்றும் உள்ளிட்ட பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்தார்.

இந்த ஆய்வின் போது உயர் காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். பின்னர் கீழ்ப்பாக்கம் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்கு பதிவு மையத்தை ஆய்வு செய்த பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் மக்கள் அமைதியாகவும், சுதந்திரமான முறையில் வாக்களித்து வருகிறார்கள். தேவையான பாதுகப்பு ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: