கோவை: பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை இன்று காலை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு எப்போதும் அமைதியான மாநிலம். மக்கள் எப்போதும் அமைதியாக வந்து வாக்களித்து விட்டு சென்று விடுவார்கள். தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.
அனைவரும் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் வாக்குச்சாவடிக்கு வரும்போது நேர்மையாக, நியாயமாக மனசாட்சிப்படி வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் காரணமாக 2.5 சதவீதம் உயரும். அந்த 2.5 சதவீதத்திற்கு மேலே வரும் வாக்குப்பதிவு தான் அதிகமான வாக்குப்பதிவு சதவீதமாக நாம் கணக்கெடுத்து கொள்ள வேண்டும். இந்த தேர்தல் வழக்கமான தேர்தல்களை தாண்டி அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
