ஐ-பேக் அலுவலக சோதனை விவகாரம் முதல்வரே விசாரணையில் தலையிடுவது ஆபத்தானது: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் ஐ-பேக் அலுவலக சோதனை விவகார வழக்கில், ஒரு மாநிலத்தின் முதல்வரே விசாரணையில் தலையிடுவது ஜனநாயகத்தையே ஆபத்தில் ஆழ்த்தும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்து தரும் ஐ-பேக் நிறுவனத்தின் கொல்கத்தா அலுவலகத்தில் சட்டவிரோத பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி 8ம் தேதி சோதனை நடத்தினர்.

அப்போது மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேரடியாக தலையிட்டு சில ஆவணங்களை எடுத்துச் சென்று, விசாரணைக்கு இடையூறு செய்ததாக அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, என்.வி.அஞ்சாரியா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கு வங்க அரசு அதிகாரி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி, ‘‘இந்த விவகாரம் அடிப்படையில் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான மோதல் என்பதால் அமலாக்கத்துறையின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல’’ என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘இது ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையேயான மோதல் அல்ல. இது மாநிலத்தின் முதல்வராக இருக்கும் தனிநபரால் செய்யப்பட்ட செயல். ஒரு மாநிலத்தின் முதல்வர் விசாரணையில் தலையிடுவது ஜனநாயகத்தையே ஆபத்தில் ஆழ்த்தும். அதன்பின்னர் இதை எப்படி ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான மோதல் என நீங்கள் கூறுகிறீர்கள்’’ என கண்டனம் தெரிவித்தனர்.

Related Stories: