புதுடெல்லி: பிரதமர் மோடியை தீவிரவாதி என விமர்சித்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சென்னையில் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், பிரதமர் மோடியை தீவிரவாதி என விமர்சித்தார். பின்னர் அதை தெளிவுபடுத்திய அவர் மக்களையும், அரசியல் கட்சிகளையும் மோடி அச்சுறுத்தி வருவதையே அவ்வாறு குறிப்பிட்டதாக திருத்திக் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக, கார்கே மீது மிகக் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, அர்ஜூன் ராம், மேக்வால், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் ஆகியோர் கொண்ட பாஜ குழுவினர் டெல்லியில் நேற்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தை மிகுந்த தீவிரத்துடன் அணுக வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி உள்ளோம்.
தேர்தல் ஆணையம் உறுதியாகவும் கடுமையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்’’ என்றார். இந்த புகாரைத் தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் மிகத்தீவிரமாக எடுத்துக் கொண்டிருப்பதாகவும், 24 மணி நேரத்தில் கார்கே தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
