பட்டியலை திருத்தும் பெயரில் வாக்குரிமையை பறிக்கிறதா தேர்தல் ஆணையம்? மக்கள் எதிர்கொண்ட சிக்கல்கள்; தலையிடுமா உச்ச நீதிமன்றம்?

தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்றால், அதற்கு முக்கியமாகப் பங்காற்ற வேண்டியது தேர்தல் ஆணையம் தான். ஜனநாயக அமைப்பில் வாக்குரிமை ஓர் அடிப்படை அரசியலமைப்பு உரிமை. இதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு முழுமையாக தேர்தல் ஆணையத்தையே சாரும். ஆனால், சமீபகாலமாக தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் கேள்விகளுக்கும், கடும் விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும், அதற்கு பின்பு பாஜ ஆளும் மாநில தேர்தல்கள் வந்தபோதும் வாக்காளர் சரிபார்ப்பு நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

இதன்பிறகு வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில், ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் இருந்தது தெரிய வந்தது. இதனை காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அம்பலப்படுத்தினார். குறிப்பாக அரியானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத் தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக அவர் குறிப்பிட்டார். கர்நாடகாவில் உள்ள மத்திய பெங்களூரு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக ஒரு லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

வெறும் 5 மாதங்களிலேயே அதற்கு முந்தைய 5 வருடங்களில் இல்லாத அளவிற்கு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 18 வயதுக்கு மேற்பட்ட மக்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது. மகாராஷ்டிராவில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்த நிலையில், அடுத்ததாக நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் புதிதாக சுமார் 50 லட்சம் பேர் சேர்க்கப்பட்டனர்.

இதன்பிறகு நடந்த தேர்தலில் பாஜ கூட்டணி வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியினரின் வாக்குகள் குறிவைத்து அகற்றப்பட்டதாகவும் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதேபோல்தான் டெல்லியில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்தது. வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பு 6.41 கோடி வேட்பாளர்கள் இருந்தனர். தீவிர திருத்தத்துக்கு பிறகு வெளியான இறுதி பட்டியலின்படி 5.67 கோடி பேர் உள்ளதாக தேர்தல் ஆணைம் தெரிவித்தது. இதன்படி 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக மேற்கு வங்கத்தில் 91 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டிலும்,மேற்கு வங்கத்திலும் இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் பலர் தகுதி இருந்தும் பட்டியலில் பெயர் சேர்க்க முடியவில்லை. பல்வேறு சிக்கல்களை மக்கள் எதிர்கொண்டனர். இது வாக்குரிமையை பறிக்கும் செயல் என கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நடவடிக்கை பாஜவின் சதி என்றும், போலி வாக்காளர்கள் என்ற பெயரில் உண்மையான வாக்காளர்களை நீக்கி, ஆட்சியைக் கைப்பற்ற பாஜ முயல்வதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பகிரங்கமாகவே குற்றம் சாட்டியுள்ளார்.

வாக்குரிமை பறிக்கப்படும் இந்த போக்கு குறித்து முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவசா,தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார். தேர்தல் ஆணையத்துக்கு கேள்விகளையும் முன்வைத்திருக்கிறார். அவர் கூறுகையில், வாக்காளர் எண்ணிக்கை ஏன் அசாதாரணமாக அதிகரித்தது என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். ஒருவரின் பெயர் வேறு இடத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து, தற்போது அவர் வசிக்கும் இடத்திலும் பதிவு செய்திருக்கலாம். ஆனால், இதனை எப்படி கண்டுபிடித்து நீக்குவது என்பது முக்கிய கேள்வி.

இதற்கு ஒரு தீர்வு கொண்டு வர வேண்டும். எவ்வளவு வாக்காளர்கள் பல இடங்களில் உள்ள பட்டியலில் இருக்கிறார்கள் என்பதற்கான சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. ஆனால், ஆதாரை அடிப்படையாக கொண்டு இதற்கு தீர்வு காண முடியும். ஏனெனில், ஒரே நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் இருக்க முடியாது. அதேநேரத்தில், வாக்குரிமை தருவதற்கு ஆதாரை மட்டுமே அடிப்படை ஆதாரமாகவும் கொள்ளக்கூடாது. ஆதார் சட்டம் அதை கட்டாயமாக்கவில்லை. நிர்வாக தேவைக்காக அதனை பயன்படுத்தலாம். தகுதியான ஒருவருக்கு கூட வாக்குரிமை மறுக்கப்படக்கூடாது.

வாக்குரிமை என்பது ஒரு சேவை அல்ல; அது அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமை. அதை எளிதாக பயன்படுத்தும் வாய்ப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். பீகாரில் நடந்த சிறப்பு தீவிரத்திருத்தத்தில் வாக்குத்திருட்டு, முறைகேடு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கை விசாரித்த தேர்தல் ஆணையம், சிறப்புத் தீவிர திருத்தம் பெரும்பான்மை வாக்காளர்கள் நீக்கப்படுவதற்கு வழி வகுத்தால், அதில் நீதிமன்றமே தலையிட வேண்டி வரும் என எச்சரித்திருந்தது. இதே விஷயத்தை குறிப்பிட்ட லவசா, மேற்கு வங்கத்தில் பெரும்பான்மை வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், இதில் உச்ச நீதிமன்றம் தலையிடவேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.

* முஸ்லிம் வாக்காளர்களுக்கு குறிவைக்கப்பட்டதா?
கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டிலேயே அதிக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட 2வது மாநிலம் மேற்கு வங்கம். நாட்டின் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் சுமார் 14 சதவீதம் பேர் இங்கு உள்ளனர். இந்த மாநிலத்தை தொடர்ந்து தனது கட்டுக்குள் வைத்திருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜவுக்கு பெரும் சவாலாகவே இரு்கிறார். சிறப்பு தீவிரத் திருத்தத்தில் முஸ்லிம் வாக்காளர்களை குறிவைத்து நீக்கியுள்ளனர். இது பாஜவுக்கு பெரும் பலன் அளிக்கக் கூடியது. இது மிகப்பெரிய தேர்தல் முறைகேடு, பாஜவின் அரசியல் சதி என மம்தா விமர்சித்துள்ளார். திரிணாமுல் காங்கிரசின் வாக்கு வங்கியாக உள்ள சிறுபான்மையினர் நீக்கப்பட்டிருப்பதால், இது சதியாக இருக்கலாம் என்ற வாதம் அழுத்தமாக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஷம்செர்கஞ்ச், லால்கோலா போன்ற தொகுதிகளிலும், மாதுவா எனப்படும் பட்டியலிட மக்கள் வாழும் பகுதிகளிலும் மட்டும் 27 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

* இதுவரை 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் நடந்துள்ளது.
* இவற்றில் எஸ்ஐஆருக்கு முன்பு வாக்காளர் எண்ணிக்கை 51 கோடி.
* எஸ்ஐஆருக்கு பின்பு வாக்காளர்கள் 45.8 கோடி .
* நீக்கப்பட்ட வாக்காளர்கள் 5.2 கோடி பேர்.

சட்ட விதிகள் சொல்வது என்ன?
* சிறப்பு தீவிர திருத்த நடைமுறையில் விதிகள் 19 மற்றும் 20ன் படி பெயர் நீக்குவதற்கு முன் கட்டாயம் முன்னறிவிப்பு வழங்க வேண்டும். விளக்கம் அளிக்க வாய்ப்பு தரவேண்டும். ஆனால் நடைமுறையில் இது பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
* வாக்காளர் பதிவு விதிகளின்படி நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தால், நீதிமன்ற அனுமதி, தீர்ப்பு இன்றி பெயர் சேர்க்கவோ திருத்தம் செய்யவோ இயலாது.
* மேல் முறையீடு நிலுவையில் இருக்கும்போது தற்காலிகமாக மீண்டும் சேர்க்க அனுமதி இல்லை. இது தொடர்பாக நீதிமன்றங்களும் கூட உத்தரவிட முடியாது.

எதிர்க்கட்சி மாநிலங்களில் நீக்கப்பட்ட வாக்காளர்கள்
* தமிழ்நாடு 74,00,000
* மேற்கு வங்கம் 91,00,000
* கேரளா 8,57,000
(மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், அடுத்ததாக 50 லட்சம் பேர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இதன் பிறகு பாஜ கூட்டணி அங்கு ஆட்சியை பிடித்தது தேர்தல் ஆணைய செயல்பாட்டில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தது)

* போட்டியிடும் வாய்ப்பை பறித்த திருத்தம்: நீதிமன்றத்தை நாடித்தான் தீர்வு பெற வேண்டுமா?
தமிழ்நாட்டில், சி.கீதா என்பவர் பர்கூர், ஊத்தங்கரையில் சுயேச்சையோக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த பிறகே, தனது பெயர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது அவருக்கு தெரிய வந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடுத்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் இதில் தலையிட மறுத்து விட்டது. இருப்பினும், பீகாரில் நடந்த சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வழக்கில், அதிக வாக்காளர்களை நீக்கினால் தலையிடவேண்டி வரும் என உச்ச நீதிமன்றம் கூறியதை கீதா தரப்பு வழக்கறிஞர் நினைவூட்டினார். எனினும், தாமதமான முறையீடு என்பதால் அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

இதுபோல், மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மொதாப் ஷேக் என்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர், தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உடனே முறையீடு செய்தார். அவரது பெயர் 2002ம் ஆண்டில் இருந்தே வாக்காளர் பட்டியலில் இருந்தது. ஆனால், எஸ்ஐஆர்-ல் தரவு முரண்பாடு காரணமாக நீக்கப்பட்டது. அவரது ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகு, அவர் உண்மையான வாக்காளர் என உறுதி செய்த உச்ச நீதிமன்றம் அவரது பெயரை மீண்டும் சேர்க்க உத்தரவிட்டது. இது எஸ்ஐஆர் பெயர் நீக்க விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த முதல் தீர்ப்பு.இப்படி, பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட உண்மையாள வாக்காளர்கள் நீதிமன்றத்தை நாடி தீர்வு காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது தேர்தல் ஆணையத்தின் அலட்சியப்போக்கை காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

Related Stories: