பாலக்காடு: கேரள மாநிலம் திருச்சூர் பூரம் விழாவிற்காக பட்டாசு தயாிரத்த போது ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் பூரம் திருவிழா வரும் 26ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் வாணவேடிக்கை நடைபெறுவது வழக்கம். இதற்காக திருவம்பாடி கோயில் பிரிவினரின் பட்டாசுகள் தயாரிக்கும் தொழிற்சாலை முண்டத்திக்கோட்டில் உள்ள வயல்காட்டில் அமைக்கப்பட்டது.
இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் 7 ஷெட்களில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி கடந்த 2 வாரமாக நடைபெற்று வந்தன. பட்டாசு தொழிற்சாலையில் 40 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை பட்டாசுகள் தயாரிப்பு பணியின் போது திடீர் தீவிபத்து ஏற்பட்டதில் பட்டாசுகள் பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறின. இதில்13 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். 23 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு திருச்சூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே சிகிச்சை பெற்று வந்தவர்களில் சுந்தரன் என்ற தொழிலாளி இன்று இறந்தார். இதையடுத்து, இவ்விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
இவ்விபத்தில் உயிர்தப்பிய வில்சன் என்ற தொழிலாளி கூறுகையில், ‘தொழிற்சாலையில் பட்டாசுகளுக்கு திரி தயாரித்துக் கொண்டிருந்தபோது திடீரென தீபரவியது. இதைப் பார்த்தவுடன் தொழிற்சாலையிலிருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தேன். சிறிது நேரத்திற்குள் பயங்கர சப்தத்துடன் பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் தொழிலாளர்கள் பலர் பலியாகிவிட்டனர். நான் தப்பித்து ஓடியதால் உயிர்பிழைத்தேன்’, என்றார்.
