பிரதமர் மோடியை தீவிரவாதி என்று கூறியதாக காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: பிரதமர் மோடியை தீவிரவாதி என்று கூறியதாக காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் நேற்று (ஏப்.21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பெரியார், அம்பேத்கர், அண்ணாதுரை, காமராஜர், கருணாநிதி போன்ற திராவிடத் தலைவர்களுக்கு எதிரானது அதிமுக – பாஜக கூட்டணி. அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு அதிமுக எப்படி பிரதமர் மோடியுடன் கைகோக்க முடியும்? அவர் ஒரு தீவிரவாதி” என்று கூறினார்.

எந்த அடிப்படையில் பிரதமரை தீவிரவாதி என குறிப்பிட்டீர்கள் என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, “பிரதமர் மோடி எப்போதும் அச்சுறுத்தலை ஏற்படுத்துபவராக இருக்கிறார். அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகள் அவரது கைகளில் உள்ளன. தொகுதி மறுவரையறை விவகாரத்திலும் கூட அதை அவர் தனது கைகளில் எடுத்துக்கொள்ள விரும்புகிறார். அவர் மக்களுக்கு, அரசியல் கட்சிகளுக்கு அச்சுறுத்தலை அளிக்கிறார் என்பதாலேயே அப்படி கூறினேன். அவர் ஒரு தீவிரவாதி என்ற அர்த்தத்தில் நான் கூறவில்லை” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்தை சுட்டிக்காட்டி அவர் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் சென்ற பாஜக மூத்த தலைவர்களான நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற விவசாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் புகார் அளித்தனர்.

இந்நிலையில், பாஜக தலைவர்கள் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுத்துள்ள தேர்தல் ஆணையம் தனது பேச்சு குறித்து அடுத்த 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்கக் கோரி மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories: