திருச்சூர் வெடி விபத்து பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு

திருவனந்தபுரம்: திருச்சூர் வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. 4 பேரை காணவில்லை. இதுவரை 32 உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகப் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவை முன்னிட்டு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்துவதற்காக பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது நேற்று முன்தினம் எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 13 பேர் கருகி உயிரிழந்தனர்.

பலரது உடல் பாகங்கள் சின்னாபின்னமாகி தூக்கி வீசப்பட்டன. இந்த விபத்தில் படுகாயமடைந்த 14 பேர் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பிரவீன் (30) என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பலியானவர்கள் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மேலும் 2 உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரை 32 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த உடல் பாகங்களை அடையாளம் காண்பதற்காக டிஎன்ஏ பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வெடிவிபத்தில் சிக்கியவர்களில் 4 பேரை காணவில்லை என்று தெரியவந்துள்ளது.

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஒன்றிய அரசு ரூ. 2 லட்சமும், கேரள அரசு ரூ. 14 லட்சமும் நிவாரண உதவியாக அறிவித்துள்ளது. இந்த வெடி விபத்திற்கான காரணம் குறித்து போலீஸ், ஆர்டிஓ, மின்சார ஆய்வகத்துறை, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பு உள்பட பல்வேறு துறைகள் ஆய்வு நடத்தின. ஆனால் இதுவரை விபத்திற்கு என்ன காரணம் என கண்டுபிடிக்கப்படவில்லை.

Related Stories: