புதுடெல்லி: மக்களே கடவுள் என்ற கொள்கை ஒவ்வொரு முடிவின் மையமாக இருக்க வேண்டும் என்றும், அரசாங்கம் தனது முழுத் திறனுடனும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி 1 கோடிக்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தேசிய குடிமைப் பணிகள் தினம் ஏப்ரல் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, 1 கோடிக்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம் இந்தி, தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: 21ம் நூற்றாண்டு என்பது பெரும் சவால்களையும் வாய்ப்புகளையும் கொண்ட காலகட்டம். இதில் தினமும் புதிய தொழில்நுட்பங்கள் உருவாகின்றன. புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நாட்டு மக்களும், உலகமும் இந்தியா மீது பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளன.
இந்த வரலாற்று சிறப்புமிக்க காலகட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அரசு சேவைகளும் பணி கலாச்சாரமும் வடிவமைக்கப்படுவது மிகவும் முக்கியம். இதில் ஐ காட் கர்மயோகி போன்ற திறன் மேம்பாட்டு தளங்களை பயன்படுத்தி, கற்றலை வாழ்நாள் பழக்கமாக மாற்றிக்கொள்வது மிக அவசியமாகும். வாழ்க்கையில் புதிய விஷயங்களை அறிந்துகொள்வது மிகச் சிறந்த அனுபவங்களில் ஒன்று.
அந்த அறியும் ஆர்வத்தை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். அதே வேளையில், மக்களே கடவுள் என்ற கொள்கையுடன், அரசாங்கம் தனது முழுத் திறனையும் பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதையும், நிர்வாகம் என்பது கருணை உணர்வை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.
