பெங்களூரு: பெங்களூருவில் காதலனை உயிரோடு எரித்துக் கொன்ற இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள டெலிகாம் ஸ்டோர் ஒன்றில் பிரேர்ணா (27) மற்றும் கிரண் (27) ஆகியோர் ஒன்றாக வேலை செய்து வந்தனர். கடந்த ஓராண்டிற்கும் மேலாக இருவரும் காதலித்து வந்த நிலையில், சமீபகாலமாக கிரண் தன்னைத் தவிர்ப்பதாக காதலி பிரேர்ணா கருதி வந்தார்.
மேலும் கிரண் தன்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டாரோ என்ற அச்சமும் அவருக்கு இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரேர்ணா, கிரணைத் தீர்த்துக் கட்டத் திட்டமிட்டார். இவர்களிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பல பிரச்னைகள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில், தெற்கு பெங்களூருவின் அஞ்சனாபுராவில் உள்ள தனது வீட்டிற்கு நேற்று கிரணை பிரேர்ணா வரவழைத்தார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், கிரணிடம் ‘வித்தியாசமான முறையில் உன்னை திருமணம் செய்வதாக புரொபோஸ் செய்யப் போகிறேன்’ என்று கூறி, அவரது கண்களைத் துணியால் கட்டி நாற்காலியில் அமர வைத்தார். பின்னர் அவரது கை, கால்களைக் கயிற்றால் கட்டிப்போட்ட பிரேர்ணா, முன்கூட்டியே தயார் செய்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றித் தீ வைத்தார்.
இதனைத் தனது செல்போனில் வீடியோ எடுத்தபடியே அவர் துடிதுடித்து இறப்பதைப் பார்த்தார். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டார். தகவலறிந்த போலீசார் கருகிய நிலையில் கிடந்த கிரணின் சடலத்தை மீட்டனர். பின்னர் தப்பி ஓடிய பிரேர்ணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
