152 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு மேற்குவங்கத்தில் இன்று முதல்கட்ட தேர்தல்: அனைத்து பூத்களிலும் மத்திய படை குவிப்பு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 152 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. அனைத்து பூத்களிலும் மத்திய படை குவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்க மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடந்து வருகிறது. இதில் கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலத்தில் ஏப்.9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடத்தும் மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் முதற்கட்டமாக 152 தொகுதிகளில் இன்றும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளில் ஏப்.29 அன்றும் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தொடர்ந்து 4வது முறையாக ஆட்சி அமைக்க முதல்வர் மம்தா தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் ஆட்சியை பிடிக்க பா.ஜவும் ஆர்வம் காட்டி வருகிறது. மேலும் மேற்குவங்க வாக்காளர் பட்டியலில் இருந்து எஸ்ஐஆர் பணி மூலம் 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட பிறகு முதல் தேர்தல் நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதற்கட்ட தேர்தல் நடக்கும் வடக்கு வங்காளம் மற்றும் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள 152 தொகுதிகளில் 3.60 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதிகளில் பாதுகாப்புக்காக சுமார் 2.5 லட்சம் வீரர்களைக் கொண்ட துணை ராணுவப் படைகளின் 2,450 பிரிவுகளைத் தேர்தல் ஆணையம் களமிறக்கியுள்ளது. மேலும் முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள 8,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் ‘மிகவும் பதற்றமானவை’ என அடையாளம் காணப்பட்டுள்ளன. இருப்பினும் மேற்குவங்கத்தில் முதற்கட்ட தேர்தல் நடக்கும் அனைத்து பூத்களிலும் மத்திய படை குவிக்கப்பட்டுள்ளது.

* வேட்பாளர்கள் இன்று தொகுதியை விட்டு வெளியேற தேர்தல் ஆணையம் தடை
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் இன்று காலை 6 மணி முதல், வாக்குப் பதிவு நிறைவடையும் வரை தங்கள் சொந்தத் தொகுதிகளை விட்டு வெளியேறக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வாக்குப் பதிவு நடைபெறும் நேரங்களில் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். தேர்தல் செயல்முறைக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய எந்தவொரு செயலிலும் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

* 2.50 லட்சம் மத்திய படை குவிக்கப்பட்டது ஏன்? மம்தா கேள்வி
மேற்குவங்க சட்டப்பேரவை பாதுகாப்புக்காக இதுவரை இல்லாத அளவுக்கு 2.50 லட்சம் வீரர்கள் கொண்ட மத்தியப்படை குவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி முதல்வர் மம்தா கூறுகையில்,’ தேர்தல்கள் ஜனநாயகத்தின் திருவிழா, யாரையும் கொல்வதற்கானதல்ல. தேர்தலுக்காக சுமார் 2.50 லட்சம் மத்தியப் படை வீரர்கள் மேற்கு வங்கத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். இது முன்னெப்போதும் இல்லாத ஒன்று. இவ்வளவு படைகளைக் குவித்து அவர்கள் என்னை மிரட்ட முயற்சிக்கிறார்களா?. கவச வாகனங்களா அல்லது மக்களா, யாரிடம் அதிக சக்தி இருக்கிறது என்பதை நான் பார்க்க விரும்புகிறேன்’ என்றார்.

* திரிணாமுல் மாஜி எம்பி நடிகை நுஸ்ரத் ஈ.டி முன்பு ஆஜர்
மேற்குவங்கத்தில் வீட்டு வசதித் திட்டம் தொடர்பான மோசடி வழக்கில், நடிகையும் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான நுஸ்ரத் ஜஹான், நேற்று கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு யாஷ் தாஸ்குப்தாவுடன் வந்த நுஸ்ரத் ஜஹானிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

* மேற்குவங்கத்தில் ஜீரோ அசாமில் காங். படுதோல்வி அமித் ஷா பேச்சு
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தைக் கூட வெல்லாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,’ராகுல் காந்தியிடம் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், மேற்கு வங்கத்தில், உங்களால் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியாமல் போகலாம். அசாமிலோ, காங்கிரஸ் கட்சி தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும். ராகுல் காந்தி, நீங்கள் மோடியை எவ்வளவு அதிகமாக இழிவாகப் பேசுகிறீர்களோ, அந்த அளவுக்குத் தாமரை மலரும். ராகுல் காந்தியுடன் சேர்ந்திருப்பதால், கார்கேவின் பேச்சு நடையும் தரம் தாழ்ந்துவிட்டது’ என்றார்.

Related Stories: