மதுரை அருகே அரசுப் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

மதுரை: கொட்டாம்பட்டி அருகே அரசுப் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மார்த்தாண்டம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்தும், எதிரே வந்த அரசுப் பேருந்தும் மீது மோதிய விபத்தில் 4 ஆண்கள், 1 பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து மார்த்தாண்டத்துக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளது. பேருந்து மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வண்டிநகரம் பகுதி நான்குவழிச் சாலையில் திங்கள்கிழமை அதிகாலை சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் மதுரையில் இருந்து திருச்சி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சாலையோரம் இருந்த பயணிகள் நிழற்குடையில் மோதி ஆம்னி பேருந்து முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், இரண்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 4 ஆண்கள், 1 பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 42 பேர் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து நடந்த இடத்தில் கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் நிழற்குடையில் பயணிகள் யாரும் இல்லாததால் அதிக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த கோர விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

Related Stories: