திருப்பூர்: ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யான சுப்பராயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஊழலில் திளைத்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தனிநபர்கள் குறிப்பிட்ட சில இயக்கங்களில் சங்கமிப்பதன் மூலம், தூய சக்தியாக இருக்க வேண்டிய இயக்கம் தீய சக்திகளின் கூடாரமாக மாற்றப்படுகிறதா? விதை நெல்லை விற்றுவிட்டு பொய் நெல்லை குத்த வேண்டாம். ஊழல் புரிந்து ஈனச்சுவை கண்டவர்களும், பழமரம் தேடி பறக்கும் வவ்வால்களுமாக இருக்கும் நபர்களின் சரணாலயமாக எந்தவொரு தூய்மையான இயக்கமும் மாறிவிடக்கூடாது.
மக்கள் பணத்தை பறித்தவர்களை விடமாட்டேன் என்று மேடைகளில் முழங்கிவிட்டு, தற்போது அதே நபர்களை கட்டி அணைத்து கட்சியில் சேர்ப்பது தகுமா, முறையா, தர்மமாகுமா?. நாடு, நியாயம், நீதி மற்றும் நேர்மை ஆகிய அனைத்தும் இதற்கு பதில் கேட்கிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். தவெக ஆட்சி அமைய ஆதரவு அளித்திருக்கக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.பி. ஒருவரே சமூக வலைத்தள பக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளை விமர்சித்து பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
